ஸ்மிருதி இரானியிடம் அத்துமீறல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
ஸ்மிருதி இரானியிடம் அத்துமீறல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

புதுடெல்லி: மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை, நோக்கி ஆவேசமாக ஓடிவந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் இருவரும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் ஆளுங்கட்சியினர் வலியுறுத்தினர். உத்தரப் பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விவாதம் மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘ஒரு பக்கம் ராமர் கோயில் கட்டுவதற்கு திட்டமிடுகின்றனர். மறுபக்கம் சீதாக்கள் எரிக்கப்படுகின்றனர்’’ என்றார்.  இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘‘இச்சம்பவத்தை மதரீதியாக தொடர்புபடுத்த வேண்டாம்’’ என கூறினார்.  அப்போது காங்கிரஸ் எம்.பிக்கள் தீன் குரியாகோஷ், பிரதாபன் ஆகியோர அமைச்சர் ஸ்மிருதி இரானியை நோக்கி ஆவேசாமாக ஓடிவந்தனர். இது தாக்கும் தோரணையுடன் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்கும்படி சபாநாயகர் கூறியும் காங்கிரஸ் எம்.பி.க்கள் இருவரும் கேட்கவில்லை. இப்பிரச்னையை மக்களவையில் நேற்று எழுப்பிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்க சபாநாயகர் உத்தரவிட வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த அதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘இது எந்த அரசரின் அவையும் கிடையாது. இது மக்கள் பிரச்னைகளை விவாதிக்கும் இடம். எங்களை அச்சுறுத்த முயற்சிக்க வேண்டாம். நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம்’’ என்றார். சவுத்ரியின் கருத்து கண்டனத்துக்குரியது என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மூலக்கதை