கர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தல்: 12 தொகுதியில் பாஜ வெற்றி... எடியூரப்பா அரசுக்கு ஆபத்து நீங்கியது

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தல்: 12 தொகுதியில் பாஜ வெற்றி... எடியூரப்பா அரசுக்கு ஆபத்து நீங்கியது

பெங்களூரு: கர்நாடகா இடைத்தேர்தலில், 15 தொகுதிகளில் பாஜ 12  தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு  இரண்டு இடங்கள் கிடைத்தன. பாஜ அதிருப்தி சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி  பெற்றார். எதிர்பார்த்ததை விட கூடுதலாக 4 தொகுதிகள் பாஜ வசமாகி இருப்பதால்  முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு இருந்து வந்த ஆபத்து நீங்கி  விட்டது. கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில், அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்த 17 எம்எல்ஏ.க்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 17 பேரில், 15 பேர்  இடைத்தேர்தலில்  போட்டியிடலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில், காலியாக இருந்த 17  தொகுதிகளில் 15 ெதாகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தேர்தல் குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் வென்றால்தான், முதல்வர்  எடியூரப்பா தலைமையிலான பாஜ ஆட்சி தப்பும் நிலை இருந்தது. இதனால் பாஜ மும்முரமாக இந்த தேர்தலில் சுழன்று, சுழன்று வேலை பார்த்தது. அதேசமயம் பாஜ வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறவில்லை  என்றால், மஜத-காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க  முடிவு ெசய்திருந்தன. இதனால் அவர்களும் தேர்தல் களத்தில் வரிந்துக் கட்டிக் கொண்டு பணியாற்றினர். இந்நிலையில் தேர்தலில்  பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில்  தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அனைத்து தொகுதிகளிலும் பாஜ  வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். இறுதியில் பாஜ வேட்பாளர்கள் 12 தொகுதியிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் இரு  தொகுதியிலும், ஒரு தொகுதியில் பாஜ அதிருப்தி சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் எடியூரப்பா தலைமையிலான பாஜ அரசு பெரும்பான்மை பெற்றுள்ளது. இதனால் அந்த கட்சி தொடர்ந்து மூன்றரை ஆண்டுக்காலம் ஆட்சியில் இருக்கும் தகுதியை பெற்றுள்ளது. இடைத்தேர்தல் வெற்றிக்காக  முதல்வர் எடியூரப்பாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பாஜ தேசிய தலைவர்  அமித்ஷா ஆகியோர் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு வாழ்த்துக்களை கூறினர்.பதவி தர டெல்லி பயணம்இடைத்தேர்தல்  முடிவு குறித்து முதல்வர் எடியூரப்பா கருத்து கூறுகையில்; நாங்கள் எதிர்பார்த்தபடி, நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளை பாஜ கைப்பற்றியுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவேன். விரைவில் டெல்லி சென்று பாஜ தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர்  நரேந்திரமோடி ஆகியோரை சந்தித்து பேசுவேன் என்றார். சித்தராமையா ராஜினாமாஇடைத்தேர்தல் முடிவு குறித்து  நேற்று பெங்களூருவில் முன்னாள் முதல்வர் சித்தராமையா நிருபர்களுக்கு  அளித்த பேட்டியில், ‘‘இடைத்தேர்தல் முடிவு இப்படி இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று  கர்நாடக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ என்றார். மாநில காங்கிரஸ் தலைவர்  தினேஷ்குண்டுராவ் பேட்டியில், ‘‘இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்கள்  காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்  என்று எண்ணினோம். ஆனால் வாக்காளர்களின் தீர்ப்பு என்பது வேறு விதமாக அமைந்துவிட்டதுதோல்விக்கு முழு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் மாநில  தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ என்றார்.

மூலக்கதை