உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் 5 கட்சிகள் வழக்கு... இடஒதுக்கீட்டை முழுமையாக முடித்தபின் தேர்தல் நடத்த உத்தரவிட கோரிக்கை

தினகரன்  தினகரன்
உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் 5 கட்சிகள் வழக்கு... இடஒதுக்கீட்டை முழுமையாக முடித்தபின் தேர்தல் நடத்த உத்தரவிட கோரிக்கை

புதுடெல்லி: உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகள் நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வழக்குத் தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்காமல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக ஏற்கனவே, திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்றவைகளுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம். பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டியினருக்கான இடஒதுக்கீட்டையும் பின்பற்ற வேண்டும் என கடந்த வாரம் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் இந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதியதாக ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் விவகாரத்தில் பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி இடஒதுக்கீடு முறை என்பது இருக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், அறிவிப்பாணையில் அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதில் குறிப்பாக எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் ஆகியோருக்கான இடஒதுக்கீடு என்ன என்பதை அறிவிக்க வேண்டும். அதனால் அறிவிப்பணையை ரத்து செய்து விட்டு, அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்து விட்டு புதிய அறிவிப்பாணையை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் ஆஜராகி மேற்கண்ட மனுவில் உள்ள சாராம்சத்தை விளக்கியும், மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். திமுகவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த தலைமை நீதிபதி, டிசம்பர் 11ம் தேதி அதாவது நாளை வழக்கை எடுத்து விசாரணை மேற்கொள்வதாக நேற்று உத்தரவிட்டார். இதேபோன்று, திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் வாக்காளர் ஆகியோர் தரப்பிலும் இதே கோரிக்கை கொண்ட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அன்றைய தினமே விசாரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. * உள்ளாட்சி தேர்தல் பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி இடஒதுக்கீடு முறை என்பது  இருக்க வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெளிவாக  குறிப்பிட்டுள்ளது. * ஆனால், கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டுள்ள புதிய தேர்தல்  அறிவிப்பாணையில் அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

மூலக்கதை