பிஎஸ்எல்வி- சி48 ராக்கெட் மூலம் ரிசாட்-2பிஆர் 1 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது

தினகரன்  தினகரன்
பிஎஸ்எல்வி சி48 ராக்கெட் மூலம் ரிசாட்2பிஆர் 1 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை: புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ரிசாட்-2பிஆர் 1 செயற்கைக்கோளை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி- சி48 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. பி.எஸ்.எல்.வி- சி47 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு மற்றும்  அதிநவீனபடங்களை அனுப்பும் ‘கார்டோசாட்-3’ செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 வணிக ரீதியிலான ‘நானோ’ செயற்கைக்கோள்களை கடந்த மாதம் 27ம் தேதி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.  இந்நிலையில், புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி- சி48 ராக்கெட் மூலம் 11ம் தேதி விண்ணில் ஏவ உள்ளதாக இஸ்ரோ அறிவித்தது. எனவே, திட்டமிட்டப்படி ஆந்திரா மாநிலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து நாளை மதியம் 3.25 மணிக்கு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் 628 கிலோ எடைகொண்டது. ராக்கெட் விண்ணில்  செலுத்தப்பட்டதும் ரிசாட்-2பிஆர் 1 செயற்கைக்கோள் 576 கி.மீ தொலைவிலும் 37 டிகிரி கோணத்திலும் அதன் திட்டமிட்ட தூரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.   ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் இன்று மதியம் தொடங்க வாய்ப்புள்ளது. மேலும், பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்டானது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும்  75வது ராக்கெட் ஆகும். இந்தியாவிற்கு சொந்தமான  ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளுடன் இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான தலா 1 செயற்கைக்கோளும், அமெரிக்காவிற்கு சொந்தமான 6 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 9 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக  விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

மூலக்கதை