பின்லாந்தில் இளம்வயதில் பிரதமரான பெண்

தினகரன்  தினகரன்
பின்லாந்தில் இளம்வயதில் பிரதமரான பெண்

ஹெல்சின்கி: பின்லாந்து நாட்டில் உலகிலேயே மிக இளம்வயதில் பெண் ஒருவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். பின்லாந்து நாட்டில் கடந்த ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்று 4 கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அண்டி ரின்னே என்பவர் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் பின்லாந்தில் கடந்த 2 வாரங்களாக தபால்துறை வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இந்த விவகாரத்தை பிரதமர் அண்டி ரின்னே சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை காரணம் காட்டி பிரதமர் அண்டிக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்ப பெற்றன. இதனால் கடந்த 3ம் தேதி பிரதமர் அண்டி பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் சன்னா மரின் என்பவர் அதிக வாக்குகள் பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சன்னா மரின்(34) பின்லாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்றதன் மூலமாக உலகில் ஆட்சியில் இருக்கும் மிக இளம்வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுகுறித்து சன்னா மரின் கூறுகையில், “நான் எனது வயதை ஒரு பொருட்டாக கருதியதில்லை. மக்களுக்கு என் மீது நம்பிக்கை ஏற்படுவதற்கான வழி குறித்து மட்டுமே சிந்திக்கிறேன். செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன” என்றார். இவர் தனது 27 வயதில் சொந்த ஊரான டம்பியரில் நகரசபை தலைவரானார். 2015ம் ஆண்டு பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஜூனில் போக்குவரத்து துறை அமைச்சரானார்.

மூலக்கதை