49 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட நடிகை சாரதா

தினமலர்  தினமலர்
49 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட நடிகை சாரதா

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சாரதா. மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்தவர் இவர் தான். ஊர்வசி என்கிற பட்டம் பெற்ற இவர், சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதும் வாங்கி உள்ளார். சமீபத்தில் கேரள சர்வதேச திரைப்பட துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாரதாவும் கலந்து கொண்டார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மலையாள திரைப்படக் கதாசிரியரும், பிரபல இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் பேசும்போது, “சுயம்வரம் என்கிற படத்திற்காக சாரதாவை ஒப்பந்தம் செய்தபோது 25000 ரூபாய் சம்பளம் கேட்டு அடம் பிடித்தார்.. வேறுவழியின்றி அதை என்னுடைய மற்றும் கதாசிரியரின் சம்பளங்களை குறைத்துக் கொண்டு தான் அவருக்கு கொடுத்து ஈடு கட்டினோம்” எனக் குறிப்பிட்டார். அதைக்கேட்டு மேடையில் அமர்ந்திருந்த சாரதா உண்மையிலேயே திடுக்கிட்டுத்தான் போனார்..

பின்னர் அவர் பேச வந்தபோது, “நிச்சயமாக எனக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதன் பின்னணியில் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்பது தெரியாது.. இதற்காக அடூர் கோபாலகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.. அவரால்தான் அந்தப்படத்தில் எனக்கு முதல்முறையாக தேசிய விருதும் கிடைத்தது. அவருக்கும் அந்த படத்தில் தேசிய விருது கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டார் சாரதா..

மூலக்கதை