குடியுரிமை மசோதா குறித்து பயப்பட வேண்டாம்: நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்...மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு

தினகரன்  தினகரன்
குடியுரிமை மசோதா குறித்து பயப்பட வேண்டாம்: நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்...மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு

க்ஹரக்பூர்: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மாநில மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில்  இருந்து  மத பாகுபாட்டால் வெளியேறி வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று  பாரதிய ஜனதா கட்சி தனது 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்  அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.அதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.  ஆனால், மாநிலங்களவையில்  தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது. எனவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு  அறிவித்தது. இதற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாக்கல் செய்து, விளக்கம் அளித்து வருகிறார். மசோதா தொடர்பான  விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. மசோதாவுக்கு அதிமுக கட்சி எம்.பி.க்கள் உட்பட 293 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 82 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றியை நினைவுகூரும் வகையில் மேற்கு வங்க மாநிலம் க்ஹரக்பூரில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வெற்றி பேரணியில் பங்கேற்று  உரையாற்றிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.பி. ஆகிய இரண்டையும் ஒருபோதும் வங்காளத்தில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம், நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்.  நாங்கள் இங்கே இருக்கும் வரை யாரும் உங்கள் மீது எதையும் திணிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை இவை இரண்டும் வங்காளத்தில் செயல்படுத்த அனுமதிக்கப்படாது. எந்தவொரு முறையான குடிமகனையும் மத்திய அரசு நாட்டிலிருந்து வெளியேற்றவோ அல்லது அவரை அகதியாக  மாற்றவோ முடியாது என்று மம்தா கூறினார்.

மூலக்கதை