உன்னாவ் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை: இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் சஸ்பெண்ட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உன்னாவ் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை: இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் சஸ்பெண்ட்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசாரை, அம்மாநில காவல்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். சிலர் ஜாமீனில் வெளியில் வந்தனர்.

இந்த வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராக கடந்த 5ம் தேதி ரயில் நிலையம் சென்ற வழியில் பாலியல் பலாத்கார கும்பலைச் சேர்ந்த சிவா, சுபம் உள்ளிட்ட 5 பேர் அப்பெண்ணை அடித்து, கத்தியால் குத்தி பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர்.

இதில் அவருக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது.

டெல்லியில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அப்பெண் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவத்தை, பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உன்னாவ் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர் எரிக்கப்பட்ட வழக்கில் அலட்சியம் காட்டியதற்காக காவல் நிலைய அதிகாரி உட்பட ஏழு போலீஸ் அதிகாரிகளை உத்தரபிரதேச அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

காவல் நிலைய பொறுப்பாளர் (இன்ஸ்பெக்டர்) எஸ். ஓ. அஜய் திரிபாதி, இரண்டு துணை ஆய்வாளர்கள் அரவிந்த் சிங் ரகுவன்ஷி மற்றும் ஸ்ரீ ராம் திவாரி மற்றும் நான்கு கான்ஸ்டபிள்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றக் கட்டுப்பாடு மற்றும் வழக்குகள் தொடர்பான சம்பவங்களில் பணியில் அலட்சியம் காட்டியதாக இடைநீக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் ‘‘ஏற்கனவே இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனையை உறுதி செய்யும்’’ என்றார்.

.

மூலக்கதை