திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2668 அடி உயர மலையில் நாளை மகாதீபம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2668 அடி உயர மலையில் நாளை மகாதீபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை மகா தீப பெருவிழா நடைபெறுகிறது. 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 1ம்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 8 நாட்களாக தினமும் பகலில் விநாயகரும், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலித்து வருகின்றனர்.

7ம் நாளான நேற்று முன்தினம் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடந்தது. காலை முதல்நள்ளிரவு வரை 5 தேர்கள் அடுத்தடுத்து மாடவீதியில் பவனி வந்தன.

விழாவின் உச்சக்கட்ட நிகழ்வான கார்த்திகை தீபத்திருவிழா நாளை நடைபெறுகிறது.

நாளை அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

மலையில் மகா தீபம் ஏற்றும்போது, அண்ணாமலையார் கோயிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வார்கள். அப்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சில நொடிகள் காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்தில் காட்சியளிப்பார்.

அப்போது, கோயில் தங்க கொடிமரம் அருகேயுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மலை உச்சியில் மகா தீபம் காட்சி தரும். மகா தீப தரிசனத்தை காண திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்தியா முழுவதும் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாட்ஜ், மண்டபங்கள், ஆசிரமங்கள் அனைத்தும் பக்தர்களால் நிரம்பியுள்ளது.

நாளை மாலை ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு மலை உச்சியில் பிரகாசிக்கும். மகா தீபம் ஏற்றும்போது 2500 பக்தர்கள் மட்டும் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி சீட்டு நாளை காலை 6 மணி முதல் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகே உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலை பள்ளியில் வழங்கப்படும். மலை ஏற விரும்பும் பக்தர்கள் ஆதார் அட்டை நகலை காண்பித்து அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தலைமையில் 13ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் 16 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை மிதந்து கொண்டு இருக்கிறது.

சந்திரசேகரர் வீதியுலா

தீபத்திருவிழாவின் 9ம் நாளான இன்று காலை அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சந்திரசேகரர் 3ம் பிரகாரத்தை வலம் வந்து திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் எழுந்தருளினர்.

பின்னர் மூஷிக வாகனத்தில் விநாயகரும், புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், கைலாச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், காமதேனு வாகனத்தில் பராசக்தி அம்மனும், புலி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் பவனி வருகின்றனர்.



மலை உச்சிக்கு சென்றது தீப கொப்பரை

மகா தீபம் ஏற்றப்படும் 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட தீபகொப்பரை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்து நேற்று அண்ணாமலையார் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், மகாதீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் திரி (காடா துணி) நேற்று அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

அவற்றை 3ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் தீபகொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் கொப்பரையை தலை சுமையாக மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

3500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி, நெய், கற்பூரம் ஆகியவை நாளை காலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும்.

.

மூலக்கதை