பொள்ளாச்சி கொடூரம் போல் நடக்காமல் இருக்க தெலங்கானா போல் தமிழகத்திலும் அதிர்ச்சி வைத்தியம்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொள்ளாச்சி கொடூரம் போல் நடக்காமல் இருக்க தெலங்கானா போல் தமிழகத்திலும் அதிர்ச்சி வைத்தியம்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: அதிமுக தோல்வி பயத்தால் தான், 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்த முயல்கிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பதிவு செய்துள்ளதால் ஒத்த கருத்துடைய கட்சிகளிடையே கலந்து ஆலோசித்து கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம். ஒரே சின்னம் ஒதுக்க நீதிமன்றத்தை நாடுவோம்.

பொள்ளாச்சி சம்பவம் போன்று, இனியும் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டுமானால், தெலங்கானாவில் நடந்த  என்கவுன்டர்  போன்ற அதிர்ச்சி வைத்தியத்தை, தமிழகத்திலும் அளிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக, தர்மபுரி மாவட்டம் அரூரில் டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஆளும் அதிமுக அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தவறுகளை செய்தாவது உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில்  உள்ளது. தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுதந்திரமான ஆணையம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

அவர் தூக்கி வைத்து பேசினாலே, பொய் சொல்கிறார் என்று அர்த்தம். தற்போது ஜாதகம் பார்த்து, ஜோசியம் பார்த்துதான் உள்ளாட்சி தேர்தல் தேதியை முடிவு செய்துள்ளார்கள்.

தேர்தல் ஆணையர் வேறு, தமிழக முதல்வர் வேறு இல்லை’’ என்றார். இந்த பேட்டியின்போது, சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், தமிழக அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என சுப்பிரமணிய சுவாமி சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, அவர் எனது நீண்டநாள் நண்பர்.

அவரை தொடர்பு கொண்டு பேசினால் தான், என்ன என்பது தெரியவரும் என டிடிவி தினகரன் கூறினார்.

.

மூலக்கதை