கோவை உள்பட 21 மாவட்டங்களில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோவை உள்பட 21 மாவட்டங்களில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை

கோவை: கோவை உள்பட 21 மாவட்டங்களில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கவும், கர்ப்பிணிகளின் உடல் நலத்தை மேம்படுத்தவும் மத்திய அரசின் சார்பில் போஷன் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் கடந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து குழுமம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தில் 11 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் கோவை, திருவண்ணாமலை உள்பட 21 மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைப்பது, ரத்த சோகை விகிதம் குறைத்தல், ஊட்டச்சத்து குறைவு இல்லாத குழந்தைகள் இருக்கும் சூழல் உருவாக்குதல் போன்றவற்றை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில், கர்ப்பிணியாவது முதல் குழந்தையின் 2 வயது வரை கண்காணிக்கப்படும்.

இத்திட்டத்திற்காக, அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கி ஆன்ட்ராய்டு மொபைல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்ப்பிணிகள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டத்தை மாவட்ட அளவில் செயல்படுத்தும் விதமாக, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட திட்ட உதவியாளர், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் மாதம் சம்பளம் ரூ. 20 ஆயிரம் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில், வட்டார திட்ட உதவியாளர்களுக்கு மாதம் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கோவை உள்பட 21 மாவட்டங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இதனால், ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் கூறுகையில், ‘‘இந்த பணிக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தனர். அரசு பணி என்பதால் ஆர்வத்துடன் சேர்ந்தோம்.

இந்த திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் தற்போது வரை எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.

அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் இல்லை.

எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

.

மூலக்கதை