மேலடுக்கு சுழற்சி உருவாகி வருவதால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மேலடுக்கு சுழற்சி உருவாகி வருவதால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மேலடுக்கு சுழற்சி உருவாகி வருவதால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் அனைத்து மாவட்டங்களிலும் பரவலமாக மழை பெய்து வருகிறது.

இதனால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதால், விவசாய பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, இந்த பருவமழையால் வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

  இந்த தொடர் மழையால் பெரும்பாலான பெரிய அணைகளில் தண்ணீர் முழு கொள்ளளவை அடைந்துள்ளது.

இதுதவிர தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், கண்மாய்கள் என அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாகவே 12 சதவீதம் மழை பெய்துள்ளது. தற்போது வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் லேசான தூறலுடன் கூடிய மழையே பெய்தது. வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக மேகங்கள் திரண்டு வருகிறது.



இதனால் தமிழகம் முழுவதும் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், இலங்கைக்கு தென் கிழக்கே மேலடுக்கு சுழற்சி தற்போது உருவாகி வருகிறது.

இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு பிறகு தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை