ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

சென்னை: ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்காகன வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 27 மற்றும் 30ம் தேதி 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது.

அதே நேரம் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் இடஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையறைக்கு பிறகு தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 91,975 ஊரக ஊராட்சிகளுக்கான பதவியிடங்களை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வருகிற 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்த நிலையில், இரண்டு கட்டங்களுக்கும் வேட்பு மனுதாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வேட்பாளர்கள் அவர்கள் பகுதிக்கு உட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தங்களின் வேட்புமனுக்களை மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.

 வேட்பு மனு தாக்கல் செய்ய 16ம் தேதி கடைசி நாள் ஆகும்.

17ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 19ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறலாம்.   இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து இன்று அல்லது நாளை மறுநாள் திமுக சார்பில் இது தொடர்பாக நீதிமன்றத்ைத அணுக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


.

மூலக்கதை