உயர்வு! தொடர் மழையால் பீங்கான் அகல் விளக்குகள் விலை... நலிவடைந்து வரும் செராமிக் தொழிலுக்கு புத்துணர்ச்சி

தினமலர்  தினமலர்
உயர்வு! தொடர் மழையால் பீங்கான் அகல் விளக்குகள் விலை... நலிவடைந்து வரும் செராமிக் தொழிலுக்கு புத்துணர்ச்சி

விருத்தாசலம் : அகல் விளக்கு விலை உயர்ந்துள்ளதால், விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விருத்தாசலத்தில், கடந்த 1965ல், 100 ஏக்கர் பரப்பளவில் செராமிக் தொழிற்பேட்டை துவங்கப்பட்டது. இங்கு, அகல் விளக்குகள், டீ கப், வாட்டர் பில்ட்டர், எலக்ட்ரிக் ஹீட்டர், சுவாமி சிலைகள், பறவைகள், இயற்கை காட்சிகள், வாஷ்பேசின், சானிட்டரி பொருட்கள், பியூஸ் கேரியர் உட்பட ஏராளமான பீங்கான் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பிற மாநில தொழிலாளர்கள் உட்பட 2 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.

இங்கு உற்பத்தியாகும் அகல் விளக்குகள் உள்ளிட்ட பிற கலைப்பொருட்கள் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, கனடா, அந்தமான், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கும்; புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், மும்பை உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.தீபாவளி, தசரா, கார்த்திகை போன்ற முக்கிய பண்டிகை காலங்களில் 2 முதல் 5 கோடி வரை அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்படும். வரும் 10ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, அகல் விளக்குகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்தது.

ஆனால், தொடர் மழை காரணமாக அகல் விளக்குகள் உற்பத்தி பணி பெரிதும் பாதித்தது. மண்ணை பிசைந்து உற்பத்தி செய்வதற்கும், அதனை சுட்டு உலர வைப்பதற்கும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமமடைந்தனர். இருப்பினும், நடப்பாண்டில் 5 கோடிக்கும் அதிகமாக அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்பட்டன. தொடர் மழையால் அகல் விளக்குகள் திடீர் விலையேற்றம் பெற்றன.

வழக்கமாக 60 பைசாவுக்கு விற்பனையாகும் விளக்குகள், இந்தாண்டு 50 பைசா விலை ஏற்றம் பெற்று, 1 ரூபாய் 10 பைசாவுக்கு விற்பனையானது. நலிவடைந்த செராமிக் தொழிலில், கார்த்திகை தீப விற்பனை கைகொடுத்து விட்டதாக உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து செராமிக் உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில், 'அகல் விளக்குகள் உள்ளிட்ட பீங்கான் பொம்மைகள் பிற மாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வரும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்கு உற்பத்தி முன்கூட்டியே துவங்கியிருந்தாலும், தொடர் மழையால் தொழிலாளர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். ஆனால், தற்போதைய விலையேற்றம் நலிவடைந்து வரும் செராமிக் தொழிலுக்கு, புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அகல் விளக்குகள் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்' என்றார்.

மூலக்கதை