விடை சொல்லுமா பட்ஜெட்

தினமலர்  தினமலர்
விடை சொல்லுமா பட்ஜெட்

மத்திய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கைக் குழு, ‘ரெப்போ’ விகிதத்தைக் குறைக்காமல், தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளது. இதைச் செய்திருக்கக் கூடாது என ஒரு தரப்பும், செய்ததில் தவறில்லை என மற்றொரு தரப்பும் விவாதம் செய்துகொண்டிருக்கின்றன. ஆனால், இதற்கும் மேல் பல விஷயங்கள் முக்கியமானவை. அவை என்ன?

பொதுவாக பணக்கொள்கை குழு கூடினாலேயே, ‘ரெப்போ’ விகிதத்தைக் குறைப்பார்கள் என்பது தான் எதிர்பார்ப்பு. வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இதைச் செய்வார்கள். இதன்மூலம், வங்கிகளிடம் கூடுதல் நிதி தங்கும், கடன்வசதிகள் பெருகும் என்பது நம்பிக்கை.இம்முறை, ஆர்.பி.ஐ., ‘ஜகா’ வாங்கிவிட்டனர்.


அடுத்த ஆண்டு பட்ஜெட், பிப்ரவரி முதல் தேதி சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் நடைபெறும் அடுத்த கூட்டத்தில் ரெப்போ வட்டிக் குறைப்பை பற்றி யோசிக்கலாம், என ஊகமாகத் தெரிவித்து விட்டார்கள்.

1.35 சதவீதம்

இதற்கு கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ள காரணம் முக்கியமானது. ஏற்கெனவே, 1.35 சதவீத அளவுக்கு ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தோம். அது இன்னும் பொதுமக்கள் வரை போய்ச் சேரவில்லை. முதலில், அது கீழே போய்ச் சேர்ந்து, என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பார்ப்பதற்கு கால அவகாசம் கொடுப்போம் என, தெரிவித்துள்ளார்.பலர் இந்த லாஜிக்கை ஒப்புக்கொள்ளவில்லை.


கீழே போய்ச் சேருவது என்பது வங்கிகளின் கையில்தான் இருக்கிறது. ஒருபக்கம் அவர்களை முடுக்கிவிட்டுக் கொண்டே, மறுபக்கம், மேலும், வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.சரிந்துவரும் பொருளாதார நிலையைப் பார்க்கும்போது, தொடர்ச்சியான வட்டிவிகித குறைப்பு அவசியம். தற்போதைய தாமதம் என்பது, அபாயகரமான நிலைக்கு நமது பொருளாதாரத்தை இட்டுச்சென்றுவிடக் கூடாது என்று அச்சப்படுகிறவர்கள் இருக்கிறார்கள்.

ஆறு உறுப்பினர்களும் இந்த முடிவை ஒப்புக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, வேறொரு யோசனை தோன்றுகிறது. பொருளாதார நிலை மேன்மேலும் சரிந்துவிட்டால், அப்போது, உதவுவதற்கு வேறு பொருளாதாரக் கருவிகளே இல்லாது போய்விடுமோ என்ற அச்சமே இவர்களை ஆட்டிவைத்திருக்கலாம். அதனால் தான், ரெப்போ வட்டிவிகித குறைப்பை ஒத்திவைத்திருக்கிறார்களோ; இருக்கலாம்.இதற்கு சக்திகாந்த தாஸ் பேச்சியிலேயே போதுமான காரணங்கள் இருந்தன.

ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்த நிதியாண்டில், 5 சதவீதம் தான் வளரும் என்று கணித்திருக்கிறது, ஆர்.பி.ஐ., பிப்ரவரி 2019ல், 7 சதவீதமாக இருக்கும் கருதப்பட்டது, பத்தே மாதங்களில், 5 சதவீதமாகக் குறைந்திருப்பது ஆச்சரியம்.இதேபோல், சில்லறை பணவீக்கம், அக்டோபர் இறுதியில், 4.62 சதவீதமாக உயர்ந்துள்ளது.


உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் அலைபேசி கட்டணங்களின் விலையேற்றம் ஆகியவை, சில்லறைப் பணவீக்கத்தை மேலும் உயர்த்தலாம் என, கருதுகிறது ஆர்.பி.ஐ., அடுத்த நிதியாண்டிலும் இதன் பாதிப்பு தொடரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

வட்டிக் குறைப்பு

இதோடு, சர்வதேசப் பொருளாதாரச் சூழ்நிலைகளும் சாதகமாக இல்லை. அதனால், ஏற்றுமதி துறை அவ்வளவு வேகமாக வளர வாய்ப்பில்லை என்ற எண்ணமும் இருக்கிறது.அதாவது, ஆர்.பி.ஐ., ரொம்ப கவனமாக இருக்கிறது. தங்களுடைய பணக்கொள்கை முடிவுகள் செய்வதை விட, அரசாங்கத்தின் செயல்திட்டங்களும் கொள்கை முடிவுகளும் தான் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என, அது கருதுகிறது. அதனால் தான், பிப்ரவரிக்குப் பின்னர் அடுத்த வட்டிக் குறைப்பு என்று ஊகமாகச் சொல்லி இருக்கிறது.படிப்படியாக, ஆர்.பி.ஐ.,யும் கையறு நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறதோ என்ற எண்ணம் எழாமல் இல்லை.

இன்னும் இரண்டு விஷயங்கள் நம் கவனத்தைக் கவருகின்றன. ஜி.எஸ்.டி., வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு, அதற்கு ஈடானத் தொகையை மத்திய அரசு வழங்கவேண்டும். ஆகஸ்ட், செப்டம்பருக்கான தொகை வழங்கப்படவில்லை, அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேரளம், டில்லி, பஞ்சாப் மாநில நிதி அமைச்சர்கள் மத்திய நிதி அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்கள்.அத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார், நிர்மலா சீதாராமன்.


அதேபோல், ஜி.எஸ்.டி., மாத வருவாய் குறைந்துபோய்விட்டது. அதை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இருப்பது போல் தெரிகிறது.ஜி.எஸ்.டி.யின் 5 சதவீத அடுக்கு, 6 சதவீதமாகவோ, 9 சதவீதமாகவோ உயர்த்தப்படலாம்; 12 சதவீத அடுக்கிலும் மாற்றம் கொண்டுவரப்படலாம் என்ற யூகப் பேச்சுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.


நடவடிக்கைகள்

இதன்மூலம் மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரிவருவாய் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி செய்யப்படாது என்று இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை எந்தவொரு விளக்கமும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை.ஆர்.பி.ஐ., முதல் பொதுமக்கள் வரை எல்லோரும் ஒரே ஒரு புள்ளியில் நிற்கிறார்கள்.


அரசாங்கம் எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகள் எவ்வளவு வேகமாக பொருளாதார மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறது என்று பார்க்க விரும்புகிறார்கள். மேலும், தேவைப்படும் கூடுதல் சீர்திருத்தங்கள் என்னென்ன என்பதையும் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள்.பிப்ரவரி பட்ஜெட், இதற்கெல்லாம் விடை சொல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆர்.வெங்கடேஷ்

பத்திரிகையாளர்

[email protected]

மூலக்கதை