ஏர்டெல், வோடபோனில் எல்லா அழைப்புகளும் இனி அளவின்றி பேசலாம்: இலவச நிமிட வரம்பு நீக்கம்

தினகரன்  தினகரன்
ஏர்டெல், வோடபோனில் எல்லா அழைப்புகளும் இனி அளவின்றி பேசலாம்: இலவச நிமிட வரம்பு நீக்கம்

புதுடெல்லி: வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம் என, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஜியோ வருகையால் தொலைத்தொடர்ப்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தன. அதிகபட்சமாக வோடபோன் ஐடியா நிறுவனம் ₹50,000 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்ததாக அறிவித்தது.  இந்நிலையில், நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அழைப்பு மற்றும் இணைய பயன்பாட்டுக்கான பேக்கேஜ் கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தின. இது கடந்த 3ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதோடு, வேறு நெட்வொர்க்கிற்கு அதிகபட்சமாக 3000 நிமிடங்கள் வரைதான் பேச முடியும் என அறிவித்தன. கட்டணமும் உயர்ந்து பயன்பாட்டுக்கும் கட்டுப்பாடு விதித்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இதை தொடர்ந்து, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளன. இதன்படி, வேறு நெட்வொர்க்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அழைப்பு வரம்பு நீக்கப்படுகிறது என தெரிவித்துள்ளன. இதனால் வேறு நெட்வொர்க்குகளுக்கு வாடிக்கையாளர்கள் இனி அளவில்லாமல் பேச முடியும். ஜியோவால் பாதிக்கப்பட்ட இந்த நிறுவனங்கள், ஜியோவுக்கு போட்டியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

மூலக்கதை