6 மாதங்களை கடந்த போராட்டம் ஹாங்காங்கில் மக்கள் பிரமாண்ட பேரணி: முதல் முறையாக அரசு அனுமதி

தினகரன்  தினகரன்
6 மாதங்களை கடந்த போராட்டம் ஹாங்காங்கில் மக்கள் பிரமாண்ட பேரணி: முதல் முறையாக அரசு அனுமதி

ஹாங்காங்: ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டம் 6 மாதங்களை கடந்ததை அடுத்து நேற்று பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. ஹாங்காங்கில் கடந்த ஜூன் மாதம் அரசு கொண்டு வந்த கைதிகள் பரிமாற்ற சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடங்கியது. நீண்ட நாட்கள் நடந்த போராட்டத்தில் பின்னர் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள்  தங்களது அடையாளங்களை மறைத்து முகமூடி அணிந்து போராட்டங்களில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்க அரசு முகமூடி அணிந்து போராட்டத்தில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டது. கடும் எதிர்ப்பு  நீடித்ததால் சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவை அரசு திரும்ப பெற்றது. எனினும், ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டம் தொடங்கி இன்றுடன் 6 மாதங்கள்  முடிகிறது. இதனை முன்னிட்டு மனித உரிமை முன்னணி என்ற அமைப்பு சார்பில் பிரமாண்ட பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. முதல் முறையாக இந்த பேரணிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. அதே நேரத்தில் பேரணியில் வன்முறை  ஏற்பட்டால் சகித்து கொள்ள முடியாது என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று மிக பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர். கவுன்சிலர் தேர்தலில் கடும் தோல்வியடைந்த பின்னரும்  சீனா மற்றும் தலைவர் மேரி லேம் ஆகியோர் மக்களுக்கு சலுகைகளை வழங்கவில்லை என்று பேரணியில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர். பேரணி தொடங்குவதற்கு முன்னதாக முதல் நாள் இரவு சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பிஸ்டல் மற்றும் கத்திகளை காவல்துறையினர் பார்வைக்கு வைத்தனர். மேலும் இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும்  தெரிவித்தனர்.

மூலக்கதை