அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குழப்பம் மீண்டும் ரகசிய சோதனை பீதி கிளப்பிய வடகொரியா

தினகரன்  தினகரன்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குழப்பம் மீண்டும் ரகசிய சோதனை பீதி கிளப்பிய வடகொரியா

சியோல்: அமெரிக்கா-வடகொரியா இடையே அணு ஆயுத பேச்சுவார்த்தை ஸ்தம்பித்துள்ள நிலையில், மிக முக்கியமான சோதனை ஒன்றை நடத்தியதாக வடகொரியா கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கடந்த 2018ம் ஆண்டு முதல் முறையாக சந்தித்து பேசினர். அப்போது, அணு ஆயுதங்களை ஒழிப்பதாகவும், ஏவுகணை சோதனை மையங்களை மூடுவதாகவும் கிம் கூறினார்.  இதற்கு வடகொரியா மீதான பொருளாதார தடைகள் நீக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். அதன்பின்பு இரண்டு முறை கிம்மை டிரம்ப் சந்தித்து பேசினார். ஆனாலும், அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றம்  ஏற்படவில்லை. பொருளாதார தடைகளை நீக்கி, அணு ஆயுத பேச்சுவார்த்தையை  தொடங்க, அமெரிக்காவுக்கு இம்மாதம் 31ம் தேதி வரை வடகொரியா கெடு விதித்திருந்தது. இந்நிலையில், வடகொரியாவின் சோகே பகுதியில் உள்ள செயற்கைக்கோள் ஏவுதளத்தில் நேற்று முன்தினம் முக்கியமான சோதனை நடத்தியதாக வடகொரியா கூறியுள்ளது. ஆனால், என்ன சோதனை என்பதை அது தெளிவுபடுத்தவில்லை.  வடகொரியாவின் நிலைப்பாட்டில் இந்த சோதனை முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மிடில்பர்ரி மையத்தில் பணியாற்றும் ஜெப்ரி லெவிஸ் என்பவர் கூறுகையில், ‘‘கடந்த 5ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில், வடகொரியா சோதனை செய்த இடத்தில் மிகப்பெரிய  கன்டெய்னர் இருந்துள்ளது. இதனால், இங்கு ராக்கெட் இன்ஜின் சோதனை செய்யப்பட்டு இருக்கலாம்,’’ என்றார். முக்கிய சோதனை அறிவிப்பை வடகொரியா வெளியிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘‘வடகொரிய அதிபர் கிம்மடன் உறவு நன்றாக உள்ளது. வடகொரியா ஏதாவது விரோதமாக செயல்பட்டால்,  அது எனக்கு ஆச்சர்யம் அளிக்கும்,’’ என குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுக்கு நெருக்கடி தரவா?வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வடகொரிய அதிபர் கிம் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இறுதியாக, இந்த தடைகளை நீக்குவதற்கு இம்மாதம் 31ம் தேதி வரை டிரம்ப்புக்கு அவர்  கெடுவும் விதித்துள்ளார். கெடு நெருங்கும் நிலையில், டிரம்ப் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். எனவே, அவருக்கு நெருக்கடி தர கிம் இந்த ரகசிய சோதனையை நடத்தியதாக கருதப்படுகிறது.

மூலக்கதை