குருவாயூரில் கஜராஜன் கேசவனுக்கு நினைவஞ்சலி: 22 யானைகள் பங்கேற்றன

தமிழ் முரசு  தமிழ் முரசு
குருவாயூரில் கஜராஜன் கேசவனுக்கு நினைவஞ்சலி: 22 யானைகள் பங்கேற்றன

பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூர் தேவஸ்தானத்தில் உள்ள கஜராஜா விருதுபெற்ற கேசவன் யானையின் உருவ சிலைக்கு நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 22 யானைகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தின.

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் ஏகாதசி திருவிழாவையொட்டி, குருவாயூர் கேசவன் என்ற யானையின்  சிலைக்கு குருவாயூர் தேவஸ்தான வளர்ப்பு யானைகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிலம்பூர் ராஜா குடும்பத்தை சேர்ந்த சாமூதிரி ராஜா, குருவாயூர் கோயிலுக்கு காணிக்கையாக கேசவன் என்ற யானையை அளித்தார்.

இந்த யானை குருவாயூர் கோயிலின் அனைத்து திருவிழாக்களிலும் முதன்மையாக பங்கேற்று வந்தது. கேரள அரசின் கஜராஜா என்ற விருதை பெற்ற இந்த யானை 54 ஆண்டுகளாக குருவாயூர் தேவஸ்தான நிர்வாகத்தின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டு தனது 72வது வயதில் மரணமடைந்தது.



இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் குருவாயூர் கோயிலில் கஜராஜா கேசவனுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நேற்று குருவாயூர் கோயிலில் நடந்தது.

கேசவனுக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக கோயில் யானைகள் ஊர்வலமாக சென்றன. தற்போதைய கோயில் தலைமை யானையான பத்மநாபன் மீது கேசவனின் உருவப்படத்துடன் ஊர்வலமாக சென்று குருவாயூர் தேவஸ்தான அலுவலகத்தில் அமைந்துள்ள கேசவன் உருவசிலைக்கு முன்பாக மலர் தூவி யானைகள் அஞ்சலி செலுத்தின.

பின்னர் யானைகளுக்கு யானையூட்டும் நடைபெற்றது.

.

மூலக்கதை