திருவண்ணாமலையில் தீபத்திருவிழா 8ம் நாளான இன்று குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவண்ணாமலையில் தீபத்திருவிழா 8ம் நாளான இன்று குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 8ம் நாளான இன்று காலை மரக்குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலா வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவின், 7ம் நாளான நேற்று பஞ்சமூர்த்திகள் தேர் திருவிழா நடந்தது. நேற்று காலை முதல் நள்ளிரவு வரை முதலாவதாக விநாயகர் தேர், 2வதாக சுப்பிரமணியர் தேர், 3வதாக சுவாமி தேர் என அழைக்கப்படும் `மகா ரதம்’  மாடவீதியில் பவனி வந்தது.

மகா ரதத்தின் மீது  பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர். மாடவீதியில் வலம் வந்த மகாரதம் இரவு சுமார் 9. 30 மணியளவில் நிலையை அடைந்தது.

இதைத்தொடர்ந்து அம்மன் தேர் புறப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்ட பராசக்தி அம்மன் பவனி வந்தார்.

இந்த தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். தேரோட்டத்தின் நிறைவாக இரவு சண்டிகேஸ்வரர் தேர் மாடவீதியில் பவனி வந்தது.

இந்நிலையில், தீபத்திருவிழாவின் 8ம் நாளான இன்று பகல் மரக்குதிரை வாகனத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் புறப்பட்டு பவனி வந்தனர்.

மாலை 4. 30 மணியளவில் தங்கமேரு வாகனத்தில் பிச்சாண்டவர் வீதிஉலா நடைபெறும். 6 மணியளவில் கோயில் கலையரங்கில் பரதநாட்டியம் நடக்கிறது.
இரவு உற்சவமாக மரக்குதிரை வாகனத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், குதிரை வாகனத்தில் பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் பவனி வந்து அருள்பாலிக்க உள்ளனர்.

தீபத்திருவிழாவின் 10ம் நாளான நாளை மறுநாள் அதிகாலை பரணி தீபமும், மாலை மகாதீப பெருவிழாவும் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை கோயிலில் ஏகன் அனேகன் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், 5 அகல்விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு பின்னர் ஒரே தீபமாக சேர்க்கப்படும்.

பின்னர் மாலை கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.

மகாதீபம் ஏற்றப்படும் தீபக்கொப்பரையும், நெய்யும், 1000 மீட்டர் துணியும் தயார் நிலையில் உள்ளது.

மகாதீப கொப்பரை நாளை காலை மலைக்கு ெகாண்டு செல்லப்படும். மகா தீபத்தை தரிசிக்க ஆன்லைனில் டிக்கெட் விற்பனை நேற்று காலை தொடங்கியது.

இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் சுமார் 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.

.

மூலக்கதை