தொழிற்சாலையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்: டெல்லி தீ விபத்தில் 43 பேர் பரிதாப பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தொழிற்சாலையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்: டெல்லி தீ விபத்தில் 43 பேர் பரிதாப பலி

* தூங்கிக் கொண்டிருந்த பல தொழிலாளர்கள் மரணம்
* நெரிசலான பாதையால் மீட்பு பணி தாமதம்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 43 பேர் பலியானதாகவும், அதில் பல தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது தீவிபத்தில் சிக்கி பலியானதாகவும், நெரிசலான பாதை மற்றும் குடியிருப்புகளால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தலைநகர் டெல்லியின் அனாஜ் மண்டி பகுதியின் ராணி ஜான்சி சாலையில் உள்ள 6 மாடி கொண்ட ஒரு தொழிற்சாலையில், இன்று அதிகாலை 5. 22 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொழிற்சாலையின் உள்ளே இருந்த தொழிலாளர்கள் பெரும் கூச்சலிட்டனர். ஒரே மரண பீதியால், அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்க போராடினர்.

தகவலறிந்த தீவிபத்து மீட்பு குழுவினர் 35 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று, சம்பவ இடத்தில் தீ விபத்து மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர்.

முதற்கட்டமாக மீட்கப்பட்ட சிலர் எல். என். ஜே. பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரம் முதற்கட்ட தகவலில் தெரிவித்தது. மீட்கப்பட்ட மற்றும் காயமடைந்த பலர் ஆர். எம். எல் மருத்துவமனை மற்றும் இந்து ராவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும், 2 தனியார் மருத்துவமனைக்கும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீ விபத்து சம்பவம் காரணமாக உடனடியாக இப்பகுதியில் சாலை போக்குவரத்தை மூடினர்.

வாகன ஓட்டிகள் ராணி ஜான்சி ஃப்ளைஓவரைப் பயன்படுத்துமாறும், செயின்ட் ஸ்டீபனில் இருந்து ஜான்டேவலனுக்கு வரும் பயணிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தீயணைப்பு தலைமை அதிகாரி சுனில் சவுத்ரி கூறுகையில், “600 சதுர அடி நிலப்பரப்பில் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளே மிகவும் இருட்டாக இருந்தது.

இது ஒரு தொழிற்சாலை; பள்ளி பைகள், பாட்டில்கள் மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

நாங்கள் இதுவரை 56 பேரை மீட்டு மருத்துவ உதவிக்காக எல். என். ஜே. பி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம்.

அவர்களில் சிலர் காயமடைந்த நிலையில், மற்றவர்கள் மயக்கம் அடைந்தனர். சம்பவம் நடந்தபோது சுமார் 20 முதல் 25 தொழிலாளர்கள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்ததாக உரிமையாளர் கூறினார்.

இதுவரை 43 பேர் உயிரிழந்து உள்ளதாக போலீஸ் தகவல் கூறுகிறது’’ என்று தெரிவித்தார். முன்னதாக, நெரிசலான பாதைகள் மற்றும் குறுகிய நுழைவாயில்களால், தீயணைப்பு வீரர்களுக்கு வாகனங்களை கொண்டு செல்வதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் செல்வதற்கு முன்பே, அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் ஏற்கனவே மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். ராணி ஜான்சி சாலை மத்திய டெல்லியில் அமைந்துள்ளது.

இது அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். இப்பகுதியில், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களும் அதிகளவில் உள்ளன.



தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

தொழிற்சாலையின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். தொழிற்சாலையின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும், மிகப்பெரிய தீவிபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, டெல்லி தீயணைப்பு சேவையின் தீயணைப்பு அதிகாரி அதுல் கார்க் கூறுகையில், ‘‘மூச்சுத்திணறல் காரணமாக சிலர் உயிர் இழந்துள்ளனர்.

மேலும் சிலர் கட்டிடத்திற்குள் இன்னும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க, தீயணைப்பு மீட்பு குழுவினர் முயன்று வருகின்றனர்.

தீ முழுவதும் அணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. தீக்காயங்கள் ஏற்பட்டவர்கள் நகரத்தின் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும்’’ என்று கூறினார்.

இன்று அதிகாலை தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லி அமைச்சர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று, மீட்புப் பணியை துரிதப்படுத்தினர்.


.

மூலக்கதை