மகாராஷ்டிராவில் அதிகாலை நடந்த பதவியேற்பு பின்னணி அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றது எதற்காக?... முதன்முதலாக வாயை திறந்தார் மாஜி முதல்வர் பட்நவிஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகாராஷ்டிராவில் அதிகாலை நடந்த பதவியேற்பு பின்னணி அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றது எதற்காக?... முதன்முதலாக வாயை திறந்தார் மாஜி முதல்வர் பட்நவிஸ்

மும்பை: மகாராஷ்டிராவில் அதிகாலை நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியின் பின்னணி குறித்து, அம்மாநில முன்னாள் முதல்வர் பட்நவிஸ் முதன்முதலாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், அஜித் பவாருக்கு எதற்காக துணை முதல்வராக பதவி கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்  பேரவையில் பாஜக 105 இடங்களையும், 56 இடங்களுடன் சிவசேனா இரண்டாவது  இடத்தையும், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) 54 இடங்களையும், காங்கிரஸ் 44  இடங்களையும் பெற்றது. பாஜவுடன் தேர்தலை சந்தித்த சிவசேனா, அக்கட்சியுடனான  உறவை முறித்துக் கொண்டு காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி  அமைத்தது.


இதற்கிடையே, என்சிபி மூத்த தலைவர் அஜித் பவாருடன் இணைந்து பட்நவிஸ், புதிய முதல்வராக பதவியேற்றார்.

பெரும் அரசியல்  திருப்பம் ஏற்பட்டதால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி பட்நவிஸ் அரசு  நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டி இருந்ததால், அவரும், துணை  முதல்வராக இருந்த அஜித் பவாரும், 80 மணி நேரம் மட்டுமே நீடித்த பதவியை ராஜினாமா செய்தனர்.

அதன்பின், சிவசேனா  தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி ஏற்றுக் கொண்டார். காங்கிரஸ்,  தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில்,  ‘பட்நவிசுடன் அஜித்பவார் எப்படி இணைந்து அரசு அமைத்தார்; எதற்காக பாஜவுடன்  திடீர் உறவை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் எதற்காக பல்வேறு அரசியல்  களேபரங்களுக்கு இடையே மீண்டும் தேசியவாத காங்கிரசுக்கே திரும்பினார்’ என  பல்வேறு கேள்விகளுக்கும் இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக,  பட்நவிசிடம் அப்போது கேட்ட போது, ‘சமயம் வரும்ேபாது சொல்கிறேன்’ என்றார்.

ஆனால், பல நாட்களாக எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்த நிலையில்,  தற்போது தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பட்நவிஸ் கூறியதாவது: மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார்தான் என்னை அணுகினார். அஜித் பவார் அனைத்து 54 என்சிபி எம்எல்ஏக்களும் ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

பாஜவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக, அவர்கள் கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்களிடம் என்னை பேச வைத்தார். அவர்களும் என்னிடம் பேசினர்.

அஜித் பவார் என்சிபி தலைவரான சரத்பவாருடன் விவாதித்ததாக என்னிடம் கூறினார். மேலும், அஜித் பவார் எங்களை அணுகி, என்சிபி கட்சி காங்கிரசுடன் செல்ல விரும்பவில்லை.

மூன்று கட்சி அரசாங்கம் (சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ்) இயங்க முடியாது.

பாஜவுடன் ஒரு நிலையான அரசை ஏற்படுத்த தயாராக உள்ளோம் என்றார்.

பாஜ மூத்த தலைவர்களும், அஜித் பவாரின் கருத்துக்கு இசைவு தெரிவித்தனர். அதன்படியே, அஜித்பவார் துணை முதல்வராகவும், நான் முதல்வராகவும் பதவியேற்றோம்.

ஆனால், அவர் கூறியபடி நடக்கவில்லை. திரைக்குப் பின்னால் நடந்த அரசியல் நாடகம் பற்றிய கதைகள் அடுத்தடுத்த நாட்களில் வெளிப்படும்.

நீர்ப்பாசன முறைகேட்டில் அஜித் பவார் விடுவிக்கப்பட்டதாக ஏசிபி அறிக்கை வெளியிட்டதாக கூறுகின்றனர். அவர், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஏசிபி பிரமாணப் பத்திரம் நவ. 27ம் தேதி வெளியானது.

நான் நவ. 26ம் தேதியன்றே ராஜினாமா செய்துவிட்டேன்.

ஏசிபி-யின் அறிக்கை வழக்கில் நிற்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை