ஆபாசபடம் பார்த்த தமிழகத்தை சேர்ந்த 3000 பேர் லிஸ்ட் ரெடி: சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆபாசபடம் பார்த்த தமிழகத்தை சேர்ந்த 3000 பேர் லிஸ்ட் ரெடி: சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு

சென்னை: குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படம் பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த 3000 பேர் லிஸ்ட் தயாராகியுள்ளது. மாவட்ட வாரியாக பிரித்த பின் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம் ஆபாசப்படங்கள் பார்க்கிறார்கள் என்கிற தகவலுடன் அதற்கான லிஸ்ட்டை எப். பி. ஐ மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 3000 பேர் லிஸ்ட், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆபாசப்படம் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல. ஆனால் குழந்தைகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாசப்படத்தை பார்ப்பது குற்றம்.

தற்போது வந்துள்ள இந்த லிஸ்ட் இந்தியாவில், தமிழகத்தில் இதுபோன்று குழந்தைகள் பயன்படுத்தப்பட்ட ஆபாசப்படத்தை பார்த்தவர்கள் பட்டியல் ஆகும். இந்த லிஸ்டில் உள்ளவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.



அந்த தனிப்படை ஐபி முகவரியை வைத்து யார் யாரெல்லாம் பார்த்தார்கள் என்ற லிஸ்ட்டை எடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கான ஆபாசப்படம் பார்த்தவர்கள், 18 வயதுக்கு கீழுள்ளவர்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாசப்படங்களை பார்ப்பதோ, அதை ஷேர் செய்வதோ, டவுன்லோட் செய்வதோ, அப்லோட் செய்வதோ சட்டப்படி குற்றம்.

அதற்கு போக்சோ சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். தற்போது இந்த விவகாரம் பரபரப்பாக உள்ள நிலையில் அனைவரும் ஒருவித பயத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், காவல்துறையின் எச்சரிக்கையை தவறாக பயன்படுத்திக் கொண்டு, போலீஸார் பேசுவது போன்று தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோ பின்னணியில் வாக்கி டாக்கி ஒலியுடன் பேசும் நபர் போலீஸ் போல் மிரட்டி அந்த இளைஞரிடம் அப்பா நம்பரை கேட்கிறார்.

நாளை உன் அப்பா நம்பருக்கு போன் வரும் என்பது போன்று பேசும் ஆடியோ வெளியாகி இருப்பது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்று தங்களுக்கும் போன் வருமோ என்ற பயத்தில் பலர் உள்ளனர்.

ஆனால், இது போன்று போலீசார் செல்போனில் அழைத்து விசாரிக்க மாட்டார்கள்.

அவர்கள், நேரில் அழைத்து தான் விசாரணை செய்வார்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். இது, குறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, ‘‘3000 பேர் கொண்ட பட்டியலில் உள்ளவர்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, தகவல் அறிக்கை பதிவு செய்த பின்பு முறையாக அழைத்து விசாரிக்கப் படுவார்கள்’’ என்று தெரிவித்தனர்.   எனவே இதுபோன்று திடீரென செல்போனில் தொடர்பு கொண்டு காவலர்கள் விசாரிக்க மாட்டார்கள்.

அப்படி பேசினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் என்று போலீசார் தெரிவித்தனர்.

.

மூலக்கதை