பலாத்காரம் செய்தவர்களால் எரிக்கப்பட்ட உன்னாவ் இளம்பெண் சிகிச்சை பலனின்றி பலி: ஐதராபாத்தை தொடர்ந்து உபி.யில் சோகம்

தினகரன்  தினகரன்
பலாத்காரம் செய்தவர்களால் எரிக்கப்பட்ட உன்னாவ் இளம்பெண் சிகிச்சை பலனின்றி பலி: ஐதராபாத்தை தொடர்ந்து உபி.யில் சோகம்

புதுடெல்லி: பலாத்காரம் செய்தவர்களால் ஓராண்டுக்குப் பிறகு தீ வைத்து எரிக்கப்பட்ட உன்னாவ் இளம்பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 5 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் இருவர், கடந்த வாரம் ஜாமீனில் வெளியில் வந்தனர். இந்நிலையில், பலாத்கார வழக்கு தொடர்பான விசாரணைக்காக கடந்த வியாழக்கிழமை இளம்பெண் நீதிமன்றத்துக்கு சென்றார். ரேபரேலிக்கு செல்லும் வழியில் அவரை, ஜாமீனில் வந்த 2 பேர் உட்பட 5 பேர் வழிமறித்து தாக்கினர். கத்தியால் குத்தினர். பின்னர், பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்தனர்.இதில், 90 சதவீத தீக்காயமடைந்த அப்பெண், டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உயிரை காப்பாற்றுவது சிரமம் என டாக்டர்கள் அறிவித்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11.40 மணி அளவில் அவர் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார். ஐதராபாத்தில் பெண் டாக்டகரை பலாத்காரம் செய்து கொன்ற 4 குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற அதே நாளில், பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட உன்னாவ் பெண்ணும் சிகிச்சை பலனின்றி இறந்தது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவருடைய சாவு, உத்தர பிரதேசத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தர விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்,’’ என்று நேற்று அறிவித்தார். உபி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உன்னாவ் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.பின்னர் அவர் தனது டிவிட்டரில், ‘உன்னாவில் இதே போன்று ஒரு சம்பவம் ஏற்கனவே நடந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண்ணுக்கு அரசு ஏன் பாதுகாப்பு தரவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினந்தோறும் நடந்து வரும் நிலையில், அதை தடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?’ என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில், அரசை கண்டித்து ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். உபி.யில் பாலியல் குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தனது டிவிட்டர் பதிவில், ‘உபி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைத்திட வழி செய்ய வேண்டும். இது போன்ற கொடூர சம்பவங்கள் நாடு முழுவதும் குறிப்பாக உபி.யில் நடக்காத வண்ணம் பயத்தை ஏற்படுத்தும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். அமைச்சர்களுக்கு எதிர்ப்பு: இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் ணின் குடும்பத் தினரை சந்திப்பதற்காக மாநில அமைச்சர்களும், பா.ஜ எம்.பி. சாக்‌ஷி மஹாராஜூம் ேநற்று சென்றனர். அங்கு அவர்களை அனுமதிக் காமல் பலர் ேகாஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.‘அவர்களை விடக்கூடாது தூக்கில் போட வேண்டும்’தவறு செய்த குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதை பார்க்க வேண்டுமென்பதே உன்னாவ் இளம்பெண்ணின் கடைசி ஆசையாக இருந்துள்ளது. இதற்காக அவர் தன்னை காப்பாற்றும் படியும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை கண் குளிர பார்க்க வேண்டுமெனவும் சிகிச்சையின் போது டாக்டர்களிடம் கூறியிருக்கிறார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், எப்போது அவரது உடல் கொண்டு வரப்படும், இறுதிச் சடங்குகள் எப்போது நடத்தப்படும் என்ற விவரங்களை மாவட்ட கலெக்டர் தயா சங்கர் பதக் தெரிவிக்க மறுத்து விட்டார்.\'அகிலேஷ் தர்ணா\'உன்னாவ் இளம்பெண் பலியானதை தொடர்ந்து, அவருக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறிய பாஜ அரசை கண்டித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று காலை சட்டமன்றத்தின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், ‘‘உன்னாவ் பெண் பலியான இன்றைய நாளை கறுப்பு தினமாக அனுசரிக்கிறோம். அந்த பெண்ணின் குடும்பத்திற்கு உபி அரசு என்ன உதவி செய்தது? இந்த அரசு துயரத்தையும், இன்னல்களையும் தான் தருகிறது. உன்னாவ் பெண் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று யோகி அரசு பதவி விலக வேண்டும். கொடூர குற்றங்களால் பலியான அனைத்து மகள்களுக்காகவும் அனைத்து மாவட்ட கட்சி தலைமையகத்திலும் இரங்கல் கூட்டம் நடத்தப்படும்,’’ என்று அறிவித்தார்.\'மேனகா கண்டனம்\'பாஜ தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.பி. மேனகா காந்தி கூறுகையில், ‘‘தெலங்கானா சம்பவம், கொடூரமான ஒரு முன்னுதாரணம். சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ள கூடாது. குற்றவாளிகளை நியாயமாக நீதிமன்றத்தின் முன் தண்டனை வாங்கிக் கொடுத்து, தூக்கிலிட்டிருக்க வேண்டும்’’ என்றார்.\'குற்றவாளிகளை சுட்டுத்தள்ளுங்கள்\'பலியான உன்னாவ் பெண்ணின்  தந்தை அளித்த பேட்டியில், ‘‘எங்களுக்கு இழப்பீடோ, யாருடைய உதவியோ வேண்டாம். என் மகளை சீரழித்த கொடூரர்களை ஐதராபாத் போல ஓட ஓட விரட்டி சுட்டுக் கொல்லுங்கள் அல்லது தூக்கிலிடுங்கள். கடந்த ஓராண்டாகவே எங்களுக்கு நீதி பெற்றுத் தர யாருமே முன்வரவில்லை. எம்எல்ஏ.வோ, அரசு அதிகாரிகளோ யாருமே எங்களுக்கு உதவவில்லை. குற்றவாளிகள் பணபலம் படைத்தவர்கள் என்பதால் எங்களுக்கு நீதி கிடைக்காமல் தடுத்து விட்டனர். போலீசார் கூட எங்களுக்கு எதிராகத்தான் இருந்தனர். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் வழக்கு கூட பதிவு செய்யப்பட்டது,’’ என்றார் கலங்கிய கண்களுடன்.

மூலக்கதை