பாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை

டேராடூன்: ‘‘தீவிரவாதத்தை நாட்டின் கொள்கையாக கடைபிடிக்கும் பாகிஸ்தானிடம் இந்திய ராணுவம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,’’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார். உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் நேற்று நடந்த ராணுவ பயிற்சி நிறைவு விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆயுதப்படை வீரர்களாகிய நீங்கள் உலகிற்கு அமைதியை எடுத்து செல்ல வேண்டும். அதே நேரம், அண்டை நாடான பாகிஸ்தானுடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியா உடனான பல போர்களில் தோல்வியை தழுவிய போதிலும், பாகிஸ்தான் தீவிரவாதத்தை தொடர்ந்து அதன் கொள்கையாக கொண்டுள்ளது. ராணுவத்தின் பிடியில் ஆட்சியாளர்கள் கைப்பாவையாக இருந்து வருகின்றனர்.இந்தியா தனது எல்லையை விரிவுபடுத்த நினைப்பதில்லை என்பதற்கு வரலாற்று சான்று உள்ளது. தனது அண்டை நாடுகளுடன் அது எப்போதும் நட்புறவு பேணுவதையே விரும்புகிறது. அதேநேரம், அண்டை நாடான பாகிஸ்தான் விவகாரத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.தீவிரவாத ஒழிப்பு உடன்படிக்கை ஏற்படாவிடில் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு நீதி கிடைக்காது. இந்த பயிற்சி உங்களுக்கு வலிமையை மட்டும் தரவில்லை. மாறாக, புது வாழ்வை அளித்துள்ளது. இவ்வாறு ராஜ்நாத் பேசினார்.

மூலக்கதை