ஐதராபாத்தை தொடர்ந்து மீண்டும் பயங்கரம்: உ.பி.யில் பெண் எரித்து கொலை....பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்க சொல்லி 5 பேர் கும்பல் வெறிச்செயல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐதராபாத்தை தொடர்ந்து மீண்டும் பயங்கரம்: உ.பி.யில் பெண் எரித்து கொலை....பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்க சொல்லி 5 பேர் கும்பல் வெறிச்செயல்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் 5 பேர் கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட மற்றும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். வழக்கை வாபஸ் செய்யக் கோரி, பலாத்கார கும்பல் தீ வைத்துக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் நகரைச் சேர்ந்த இளம்பெண்ணை, கடந்தாண்டு டிசம்பர் மாதம் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இவர்களில் ஒருவன் தப்பி விட்டான்.

கைதான மற்றொருவன் கடந்த 10 நாள்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தான். இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண், பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக ரேபரேலி நீதிமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார்.

அப்போது, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் உள்பட 5 பேர் கும்பல் அந்தப் பெண்ணை வழிமறித்து தாக்கி, அந்தப் பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினர்.

அலறி துடித்த அந்த பெண்ணை, அப்பகுதியினர் மீட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங்  மருத்துவமனைக்கு விமானம் மூலம் சிகிச்சைக்காக அனுப்பினர்.

இதுகுறித்து, அந்தப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளித்து வந்த டெல்லி மருத்துவமனை மருத்துவர் சுனில் குப்தா கூறுகையில், அந்த பெண் சுயநினைவோடுதான் இருந்தார். அவர் அப்போது மிகவும் பலவீனமாக இருந்தாலும், எங்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்.

குற்றவாளிகளை விடுவிக்க வேண்டாம் எனத் திரும்பத் திரும்ப எங்களிடம் கூறிக்கொண்டே இருந்தார். நான் உயிரோடு திரும்பி வருவேனா?’ என எங்களிடம் கேட்டார்.

`என்னைக் காப்பாற்றுங்கள். நான் வாழ விரும்புகிறேன்’’ என்றார்.

இந்நிலையில், வெண்டிலேட்டரில் சுயநினைவை இழந்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், நேற்று இரவு 11. 10 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து, சஃப்தர்ஜங் மருத்துவமனையின் தீக்காயப் பிரிவு தலைவர் சலப் குமார் கூறுகையில், ‘‘90 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அந்த ெபண்ணுக்கு, இரவு 11. 10 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

அவரைக் காப்பாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இரவு 11. 40 மணிக்கு உயிரிழந்துவிட்டார்’’ என்றார்.

முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணிடம், உள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட், வாக்குமூலம் பெற்றுச் சென்றார்.

தற்ேபாது இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தற்ேபாது உயிரிழந்ததால் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:  பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிய 5 பேரில் குற்றம் சாட்டப்பட்ட சிவம் திரிவேதி மற்றும் சுபம் திரிவேதி ஆகியோர் தீவைத்து கொளுத்தியவர்கள். ஹரிசங்கர் திரிவேதி, உமேஷ் பாஜ்பாய், ராம் கிஷோர் திரிவேதி ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட ெபண்ணிடம் வழக்கை வாபஸ் பெறுமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். அவர் மறுத்துவிட்டதால், தீவைத்து ெகாளுத்தி உள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தால் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அந்த பெண் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க லக்னோ காவல் ஆணையர், உன்னாவ் ஏஎஸ்பி வினோத் பாண்டே தலைமையில் 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளார்.   இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் அலட்சியம்

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில், ‘‘என் பெண்ணுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன.

இதுெதாடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

வழக்கை வாபஸ் செய்யக் கோரி தொந்தரவு செய்தனர். என் மகளை எரித்த ஐந்து பேரையும் உன்னாவோ காவல்துறையினர் சுட்டுக் கொன்றால்தான் நான் ஆறுதலடைவேன்.

அச்சுறுத்தல்கள் குறித்து தகவல் கிடைத்த போதிலும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டது. எனது உறவினரின் கடைக்கு தீ வைப்பதாக மிரட்டினர்.

உங்களால் வாழ அனுமதிக்கமாட்டோம். போலீசாரிடம் தெரிவிப்போம் என்று கூறியபோதும், பெரிய மனிதர்கள் மூலம் எங்களை அடிக்கவைத்தனர்.

அதனை மீறியும் போலீசில் புகார் அளித்தோம்.

ஆனால், மகளை கொன்றுவிட்டனர்’’ என்றார்.

.

மூலக்கதை