208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி

ஐதராபாத்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி. 20 தொடரின் முதல் போட்டி ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்தது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பந்து வீச்சை தேர்வு செய்தார்.   இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சிம்மன்ஸ்  2 ரன்னில் ஆட்டம் இழக்க லீவிஸ் 17 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 40 ரன்னும், பிரண்டன் கிங் 31 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

அரைசதம் அடித்த ஹெட்மயர் 41 பந்தில் 2பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன் விளாசினார். கேப்டன் பொல்்லார்ட் தனது பங்கிற்கு 19 பந்தில் (ஒருபவுண்டரி,4 சிக்சர்) 37 ரன் எடுத்தார்.

20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. ஹோல்டர் 9 பந்தில் 24 ரன்னிலும் ராம்டின் 11 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்திய தரப்பில் சஹால் 2, ஜடேஜா, வாஷிங்டன், தீபக் சாஹர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 208 ரன் இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித்சர்மா 8 ரன்னில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.   இதையடுத்து கே. எல். ராகுல்- கேப்டன் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தனர்.

11. 4 ஓவரில் இந்தியா 100ரன்னை எட்டியது. 37 பந்தில் அரைசதம் அடித்த கே. எல். ராகுல், 62 ரன்னில் (5பவுண்டரி, 4சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

பின்னர் வந்த ரிஷப் பன்ட் முதல் பந்திலேயே சிக்சர் விளாசினார். 9 பந்தில் 2 சிக்சருடன் 18 ரன் எடுத்து வெளியேற, மறுபுறம் விராட் கோஹ்லி 35 பந்தில் அரை சதம் அடித்தார்.

பின்னர் அவர் கோரத்தாண்டவம் ஆடினார். இடையே ஸ்ரேயாஸ் அய்யர்  வந்த வேகத்தில் (4ரன்) பெவிலியன் திரும்பினார்.

18. 4 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. கேப்டன் கோஹ்லி 50 பந்தில் தலா 6பவுண்டரி,6 சிக்சருடன் 94 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்தவெற்றி மூலம் இந்தியா1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

வெற்றிக்கு பின் கேப்டன் கோஹ்லி கூறுகையில், இளம்வீரர்கள் இன்று எனது இன்னிங்சில் முதல்பாதி ஆட்டத்தை பின்பற்றவேண்டாம்.

அந்த நேரத்தில் நான் மோசமாக பேட்டிங் செய்து கொண்டிருந்தேன். கே. எல். ராகுல் இதனால் அழுத்தம் அடைந்தார்.

ஆனால் அதனை குறைக்க என்னால் முடியவில்லை. நல்லவேளையாக ஹோல்டரின்  நல்ல ஓவர் கிடைத்தது.

அதன்பின்னர் நான் எந்த தவறு செய்வேன் என்பதை பகுப்பாய்வு செய்து பேட்டிங் பாணியை மாற்றினேன். ரோகித் அல்லது நான் நீண்ட நேரம் விளையாடவேண்டும்.

ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்கள் பங்கு இது தான். டி. 20 போட்டியில் எனது பேட்டிங்கை அதிகமாக மாற்ற விரும்புகிறேன்.

இதுபோன்ற பெரிய ஸ்கோரை சேசிங் செய்யும் போது  நிறைய கவனச்சிதறல்கள் உள்ளன. ஆனால் விளையாட்டில் மீண்டும் கவனம் செலுத்துவதை தவிர வேறு வழியில்லை.

ஜமைக்காவில் நடந்த போட்டியின் போது வில்லியம்ஸ் பந்தில் ஆட்டம் இழந்ததால் அதனை கவனத்தில் வைத்து ஆடினேன்.   ஆக்ரோஷமாக ஆடினாலும் எதிரியை மதிக்கவேண்டும், என்றார். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில் எக்ஸ்ட்டிராவாக அதிகம் கொடுத்ததால் நாங்கள் கிட்டத்தட்ட 2 அல்லது ஒன்றரை ஓவர் கூடுதலாக பந்து வீசி விட்டோம்.

இதுவே தோல்விக்கு காரணமாகி விட்டது. இது ஒரு பேட்டிங் பிட்ச்.

கிங், ஹெட்மயர் சிறப்பாக ஆடினர். பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டனர்.   தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவோம், என்றார்.



அதிக பட்ச சேசிங்

இந்திய அணி 208 ரன் இலக்கைசேசிங் செய்து அசத்தியது.

சேசிங்கில் இந்தியாவின் அதிகபட்ச ரன் இதுவாகும்.   இதற்கு முன் 2009ம் ஆண்டு மொகாலியில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 207 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்ததே சிறந்த சேசிங்காக இருந்தது.

.

மூலக்கதை