பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு

திருமலை: கால்நடை பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற வழக்கில் நேற்று என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களையும் அடக்கம் செய்ய ஐகோர்ட் தடைவிதித்துள்ளது. தெலங்கானா மாநிலம் செம்ஷபாத்தை சேர்ந்த கால்நடை பெண் டாக்டர் டிசாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற வழக்கில் முகமது ஆரிப், சென்னகேசவலு, சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் 4 பேரும் பெண் டாக்டரை எப்படி எரித்துக்கொன்றார்கள்? என சம்பந்தப்பட்ட இடத்தில் அவர்கள் நடித்துக் காண்பிப்பதை வீடியோவில் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக, நேற்று அதிகாலை சட்டான்பள்ளி மேம்பாலத்திற்கு போலீசார்  அழைத்து சென்றனர்.

அங்கு வேனில் இருந்து இறங்கிய 4 குற்றவாளிகளையும் நடித்து காண்பிக்கும்படி போலீசார் கூறினர். ஆனால் அதிகாலை என்பதால் கும்மிருட்டில் 4 குற்றவாளிகளும் போலீசாரிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க முயன்றதாகவும், தப்பிச் செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சுதாரித்துக்கொண்ட மற்ற போலீசார் 4 பேர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 மீட்டர் இடைவெளியில் 4 குற்றவாளிகளும் பலியாயினர்.

மேலும் நந்திகாமா எஸ்ஐ வெங்கடேஸ்வரலு, காவலர் அரவிந்கவுடு காயமடைந்தனர். இந்நிலையில் 4 பேரின் சடலம் மெகபூப் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது.

பின்னர் இரவு இறுதிச்சடங்கு செய்ய முகமது ஆரிப் சொந்த ஊரான ஜெக்சல், சிவா, நவீன், சென்னகேசவலு ஆகியோரின் ஊரான குடிகன்லாவில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானது தொடர்பாக தெலங்கானா ஐகோர்ட்டில் நேற்றிரவு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இரவு 8. 30 மணிக்கு இந்த வழக்கை ராமச்சந்திர ராவ், லட்சுமண்ராவ் தலைமையிலான நீதிபதிகள் விசாரித்தனர்.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் வி. எஸ். பிரசாத் ஆஜராகி, என்கவுன்டரில் உயிரிழந்த குற்றவாளிகளின் சடலங்கள் காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்ததாகவும், பிரேத பரிசோதனைகள் வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வழக்கின் விசாரணை வரும் 9ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10. 30 மணிக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் எனவும், அதுவரை 4 பேரின் சடலங்களையும் மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர். அதற்குள் பிரேத பரிசோதனை வீடியோ காட்சிகளை மெகபூப்நகர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனால் 4 பேரின் சடலங்கள் இறுதிச்சடங்கு செய்யப்படாமல் மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையமும் ஊடகங்களில் வந்த காட்சிகளின் ஆதாரமாக வைத்து தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


.

மூலக்கதை