உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தினகரன்  தினகரன்
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: ‘தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்,’ என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. இதையடுத்து, தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்ததால், ஆணையம் அதற்கான பணிகளை தொடங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்க இருந்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘மாநிலம் முழுவதும் வார்டு மறுவரையறை பணிகளை முழுமையாக முடிக்கப்படாததால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். இதே நிலைதான் தற்போது புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் உள்ளது,’என குறிப்பிடப்பட்டது.  இந்த வழக்கு விசாரணையின் போது திமுக தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், ‘மாநிலம் முழுவதும் அவசர கதியில்தான் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், கிராமம், உள்கிராமம் மற்றும் மாவட்டம் என அனைத்திலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வார்டு மறுவரையறை பணிகளை முடித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. அதனால், தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு அனைத்து பணிகளும் முடிந்த பின்னர் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், ‘புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்,’ என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு தரப்பிலும் இதே கருத்து முன்வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் எம்.ஆர்.கவாய், சூர்யகாந்த் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அதில், ‘தமிழக உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்தலாம். மேலும், புதிய மாவட்டங்கள் அனைத்திலும் அடுத்த 4 மாதங்களில் வார்டு மறுவரையறை பணிகளை முழுமையாக முடித்து, அதற்கும் தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். இடஒதுக்கீடு விவகாரத்தை பொருத்தமட்டில், பஞ்சாயத்து தேர்தல் சட்ட விதிகளின் அடிப்படையில் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்,’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,  ஏற்கனவே திட்டமிட்டப்படி வரும் 27, 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுமா? அல்லது மாற்றியமைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் நடக்காத 9 மாவட்டங்கள்: உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய உத்தரவின்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 பழைய, புதிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்காது. பிப்ரவரியில் தேர்தல் நடக்குமா?தமிழகத்தில் 31 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். காரணம், கிறிஸ்துமசுக்கு சொந்த ஊருக்கு செல்ல முன்பே அவர்கள் திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை முடித்து 27 அல்லது 28ம் தேதிதான் ஊர் திரும்பவும் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில்தான், உள்ளாட்சி தேர்தல் வருகிற 27ம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், புத்தாண்டு அதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை விடுமுறையையும் சொந்த ஊரில் கொண்டாட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் திட்டமிட்டிருந்தனர். பள்ளிகளில் தேர்வுகளும் நடைபெறும் நேரம் இது. இதுபோன்ற நாட்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருக்கும் என மாநில தேர்தல் ஆணையம் மீது அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருந்தனர். மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று பெற்றோரும் கவலையுடன் இருந்தனர்.இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றம் இன்று 9 மாவட்டங்களில் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு மட்டும் புதிதாக தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மட்டுமின்றி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த அறிவிப்பின்படி வருகிற 27, 30ம் தேதி தேர்தல் நடைபெறாது. மாநில தேர்தல் ஆணையமும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையமும் இது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை