தெற்காசிய விளையாட்டு போட்டியில் 124 பதக்கத்துடன் இந்தியா முதலிடம்: கடைசி இடத்தில் பூடான்

தினகரன்  தினகரன்
தெற்காசிய விளையாட்டு போட்டியில் 124 பதக்கத்துடன் இந்தியா முதலிடம்: கடைசி இடத்தில் பூடான்

காத்மண்டு: நேபாளத்தில் நடக்கும் தெற்காசிய விளையாட்டு போட்டியில், உசூ பந்தயத்தில் இந்திய வீரர்கள் சுராஜ் சிங், சுனில் சிங் (52 கிலோ), இந்திய வீராங்கனைகள் சனதோய் தேவி (52 கிலோ), பூனம் (75 கிலோ), தீபிகா (70 கிலோ), சுஷிலா (65 கிலோ), ரோஷிபினா தேவி (60 கிலோ) ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். இந்திய வீராங்கனை பித்யாபதி சானு (56 கிலோ) வெண்கலப்பதக்கம் பெற்றார். நீச்சல் போட்டியில் இந்தியா 4 தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலத்தை கைப்பற்றியது. ஆண்களுக்கான 200 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பந்தயத்தில் இந்திய வீரர்கள் லிகித் செல்வராஜ் (2:14.67 வினாடி) தங்கப்பதக்கமும், தனுஷ் சுரேஷ் (2:19.27வினாடி) வெள்ளிப்பதக்கமும் வென்றனர். பெண்கள் பிரிவில் அபெக்‌ஷா டெல்யா முதலிடம் பெற்றார்.பெண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் திவ்யா சதிஜா (1:02.78 வினாடி) தங்கப்பதக்கமும், அபெக்‌ஷா டெல்யா வெள்ளிப்பதக்கமும், இலங்கையின் அனிகா வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இவ்வாறாக நேற்று ஒரேநாளில் மட்டும் இந்தியா 30 தங்கம், 18 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கத்தை அள்ளியது. போட்டிகள் முடிவில் இந்தியா 62 தங்கம், 41 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 124 பதக்கங்கள் குவித்து முதலிடத்தில் நீடிக்கிறது. நேபாளம் 36 தங்கம், 27 வெள்ளி, 38 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களுடன் 2வது இடத்திலும், இலங்கை 17 தங்கம், 35 வெள்ளி, 55 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் 3வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 62 பதக்கங்களுடன் 4வது இடத்திலும் உள்ளது. பூடான் 6 பதக்கங்களுடன் 7வது இடமான கடைசி இடத்தில் உள்ளது.

மூலக்கதை