மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐதராபாத் போலீசிடம் கற்றுக் கொள்ளுங்கள்... உத்தரபிரதேச அரசுக்கு மாயாவதி அட்வைஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐதராபாத் போலீசிடம் கற்றுக் கொள்ளுங்கள்... உத்தரபிரதேச அரசுக்கு மாயாவதி அட்வைஸ்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அதனை தடுக்க ஐதராபாத் போலீசிடம் மாநில போலீஸ் உத்வேகத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று, மாயாவதி அறிவுரை கூறியுள்ளார். தெலங்கானாவில் கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றதற்காக, பல்வேறு தரப்பினரும் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.* இதுகுறித்து, மத்திய முன்னாள் விளையாட்டு அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இன்றைய சம்பவம் நாட்டில் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் தீமைக்கு மேலாக நல்லது இருக்கிறது என்ற செய்தியை இந்தியா வழங்கும் என்பது தெளிவாகி உள்ளது.

ஐதராபாத் காவல்துறையையும், காவல்துறையினரைப் போல செயல்பட அனுமதிக்கும் தலைமையையும், நான் வாழ்த்துகிறேன். தீமைக்கு மேலாக எப்போதும் நன்மை நிலவும் இந்த நாடு என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.* தெலங்கானா என்கவுன்டர் குறித்து, உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான மாயாவதி கூறுகையில், ‘‘உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் மாநில அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது.

இங்கேயும் டெல்லியிலும் உள்ள போலீசாரும், ஐதராபாத் காவல்துறையினரிடமிருந்து உத்வேகத்தை பெற வேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இங்கு குற்றவாளிகள் அரசு
விருந்தினர்களாக கருதப்படுகிறார்கள். உத்தரபிரதேசத்தில் காட்டாட்சிதான் நடக்கிறது’’ என்றார்.


.

மூலக்கதை