இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு

சென்னை: முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 1,18,974 ஊரக உள்ளாட்சிகளுக்கான பதவியிடங்களுக்கு வருகிற 27ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்து 4 நாட்கள் ஆகி விட்டாலும், கூட்டணி குறித்து பேச எந்த கட்சிகளும் இதுவரை ஆர்வம் காட்டவில்லை.அதே நேரம், அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சிகள் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவார்கள் என்று முடிவு செய்வார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 31 மாவட்டங்களில் உள்ள அதிமுக பொறுப்பாளர்களுடன் கூட்டணி கட்சிகள் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

கூட்டத்தில் அதிமுகவில் உள்ள 56 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. அதன்படி, தங்கள் மாவட்டங்களில் எந்தெந்த கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு சீட் வழங்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்துக்களை கூட்டத்தில் தெரிவிப்பார்கள்.

மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை, கட்சி தலைமை ஏற்றுக்கொண்டு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரம், ஊரக உள்ளாட்சி அதிக இடங்களில் அதிமுக வேட்பாளர்களே போட்டியிடுவது குறித்தும் இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று காலை அறிவித்துள்ள தீர்ப்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. அதேபோன்று, மற்ற மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை ரத்து செய்ததுடன், மீண்டும் புதிதாக அறிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை