திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாளான நாளை அண்ணாமலையார் தேர் உள்பட 5 தேர்களின் (பஞ்ச ரதங்கள்) பவனி நடக்கிறது. இன்று 63 நாயன்மார்கள் வீதி உலா வந்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் உற்சவமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் காலையிலும் இரவிலும் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

விழாவின் 5ம் நாளான நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என பக்தி முழக்கமிட்டனர்.

இன்று காலை 6ம் நாள் உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகர், யானை வாகனத்தில் சந்திரசேகரர் மற்றும் தனித்தனி விமானத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. இரவு வெள்ளி ரத உற்சவம் நடைபெறுகிறது. 7ம் நாளான நாளை மகா தேரோட்டம் எனப்படும் பஞ்ச ரதங்கள் பவனி நடக்கிறது.

நாளை காலை 7. 05 மணிக்கு மேல் 8. 05 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது.

முதலாவதாக விநாயகர் தேர் மாடவீதிகளில் பவனி வந்தபிறகு சுப்பிரமணியர் தேர் மாடவீதியில் பவனி வரும்.

‘மகாரதம்’ என அழைக்கப்படும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரின் பெரிய தேர் பவனி நடைபெறும். மகா ரதம் நிலையை அடைந்ததும், பராசக்தி அம்மன் எழுந்தருளும் அம்மன் தேர் மாடவீதிகளில் பவனி வரும்.

இந்த அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்து செல்வார்கள் என்பது தனிச்சிறப்பாகும். நிறைவாக சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெறும்.

காலை முதல் இரவு வரை நடைபெறும் தேரோட்டத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என தெரிகிறது. பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

இதேபோல், அம்மன் தேரோட்ட பாதுகாப்பு பணியில் சுமார் 200 பெண் போலீசார் ஈடுபட உள்ளனர். மகாதீபத்துக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது.

வரும் 10ம்தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 2668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படும்.

.

மூலக்கதை