ஒரு பக்கம் ராமர் கோயில்; இன்னொரு புறம் சீதைகள் எரிப்பு; நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? மக்களவையில் காங்கிரஸ் கேள்வி

தினகரன்  தினகரன்
ஒரு பக்கம் ராமர் கோயில்; இன்னொரு புறம் சீதைகள் எரிப்பு; நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? மக்களவையில் காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: நாட்டில் சீதைகள் எரிக்கப்படும் போது பாஜக ராமருக்கு கோயில் கட்டிக்கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. உத்திரபிரதேசத்தின் உனாவ் நகரில் இளம்பெண் தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக அரசின் நடவடிக்கை என்ன? என்று மக்களவையில் காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் கேள்வி எழுப்பினர். உனாவில் குற்றவாளிகளால் எரிக்கப்பட்ட பெண்ணுக்கு 95 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குற்றவாளிகளுக்கு துணிச்சல் எங்கிருந்து வருகிறது? நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று ஆதிர் ரஞ்சன் கேள்வி எழுப்பியுள்ளார். உபி.யின் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 2 பேர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் நேற்று காலை ரேபரேலியில் நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜாமீனில் வெளியே வந்த 2 பேரும் அவரை வழிமறித்து தமது நண்பர்களுடன் சேர்ந்து தீ வைத்த கொளுத்தினர். பெண்ணின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஏற்கனவே தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் 2 பேர் உட்பட மொத்தம் 5 பேர் தன்னை தீவைத்து கொளுத்தியதாக அப்பெண் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், லக்னோவிலிருந்து நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை எதிரே உள்ள சப்தார்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்த இளம்பெண் உயிர் பிழைப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதே போல் ஐதராபாத்தில் கடந்த 27-ம் தேதி பெண் மருத்துவரை 4 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தனர். ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பியோட முயன்ற 4 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

மூலக்கதை