மறுவரையறை பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதால் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மறுவரையறை பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதால் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை

* பழைய தேர்தல் அறிவிப்புகளும் ரத்து
* புதிய அறிவிப்பாணை விரைவில் வெளியீடு
* சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறு வரையறை செய்யாமல் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதால், 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பழைய தேர்தல் அறிவிப்புகளும் ரத்து செய்யப்பட்டதால், புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகிற 27, 30ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், ‘தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் ஏற்கெனவே இந்த மாவட்டங்கள் அங்கம் வகித்த வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருநெல்வேலி என மொத்தம் 9 மாவட்டங்களில் மறுவரையறைப் பணிகளை சட்ட ரீதியாக முடிக்காமல் மாநில தேர்தல் ஆணையம் அவசரகதியில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.அதனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரி திமுக மற்றும் 9 வாக்காளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘புதிதாக மாவட்டங்களைப் பிரிக்கும் முன்பாகவே மறுவரையறைப் பணிகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுவிட்டன.

புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும் மறுவரையறைப் பணிகளுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே மற்றும் நீதிபதிகள் பி. ஆர். கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘புதிதாக மாவட்டங்களைப் பிரித்து விட்டு, அந்த மாவட்டங்களுக்கு தொகுதி மறுவரையறை செய்யத் தேவையில்லை என்றால் அதை எப்படி புரிந்து கொள்வது? அது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும்.

இதனால் இடஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறைகள் பாதிக்கப்படும்.

எனவே, தேர்தலை நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதேநேரம் இந்த 9 மாவட்டங்களுக்கு மட்டும் மறுவரையறை உள்ளிட்ட அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி அதன்பிறகு தேர்தலை நடத்துங்கள் என தள்ளிப்போடலாம்’ என கருத்து தெரிவித்தனர்.

ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர் தரப்பு வழக்கறிஞர்கள், ‘ஒட்டுமொத்தமாக தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றனர். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘நாடாளுமன்றம் என்ன விதிகளை வகுத்துள்ளதோ அதன்படி தேர்தல் நடக்க வேண்டும்.

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிப்போடுவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் பிற்பகலுக்குள் (நேற்று மாலை) பதிலளிக்க வேண்டும்’ எனக்கூறி விசாரணையைத் தள்ளிவைத்தனர். தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ‘புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம்’ என்ற கருத்து தெரிவித்தனர். வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10. 30 மணிக்கு அறிவிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு அளிக்கிறது.அதன்படி, தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், ‘புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம். அந்த 9 மாவட்டங்களுக்கும் மறுவரையறையை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

அதன்பின், தேர்தல் ெதாடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு தேர்தலை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் தற்போதைய தீர்ப்பால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் (இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்) அறிவிப்பாணை செல்லாததாகிவிடுகிறது.

ேமலும், 9 மாவட்டங்களுக்கும் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், மாநில தேர்தல் ஆணையம் புதியதாக அறிவிப்பாணையை ெவளியிடும்.

அவ்வாறு, உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பாணை விரைவில் வெளியாகும்பட்சத்தில், அதில் ஊரக உள்ளாட்சி மற்றுமின்றி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலையும் சேர்த்து அறிவிப்பாணை வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தடை விதிக்கப்பட்ட 9 மாவட்டங்கள்
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* வேலூர்
* திருப்பத்தூர்
* ராணிப்பேட்டை
* விழுப்புரம்
* கள்ளக்குறிச்சி
* திருநெல்வேலி
* தென்காசி

பிப்ரவரியில் நடத்தப்படுமா?
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது. இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

காரணம், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்ல முன்பே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை முடித்து 27 அல்லது 28ம் தேதிதான் ஊர் திரும்பவும் திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில்தான் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27ம் தேதி என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மேலும், புத்தாண்டு அதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகை விடுமுறையையும் சொந்த ஊரில் கொண்டாட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் திட்டமிட்டிருந்தனர்.

இதுபோன்ற நாட்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருக்கும். மாநில தேர்தல் ஆணையம் மீது அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றம் இன்று தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு புதிதாக தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மட்டுமின்றி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

இந்த அறிவிப்பின்படி வருகிற 27 மற்றும் 30ம் தேதி தேர்தல் நடைபெறாது. மாநில தேர்தல் ஆணையமும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையமும் இது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

.

மூலக்கதை