பலாத்காரம் செய்து பெண் டாக்டர் எரித்துக்கொலை: 4 கொடூரன்கள் சுட்டுக்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பலாத்காரம் செய்து பெண் டாக்டர் எரித்துக்கொலை: 4 கொடூரன்கள் சுட்டுக்கொலை

* தப்ப முயன்றபோது போலீஸ் என்கவுன்டர்
* பொதுமக்கள் வரவேற்பு

திருமலை: ஐதராபாத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவத்தில் கைதான 4 பேர் இன்று அதிகாலை தப்பி ஓட முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள செம்ஷாபாத்தை சேர்ந்தவர் கால்நடை பெண் டாக்டர் டிசா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவர் கடந்த 28ம்தேதி தொண்டேப்பள்ளி சோதனைச்சாவடி அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு மாதப்பூர் சென்று மீண்டும் தொண்டப்பள்ளி சோதனை சாவடி அருகே வந்தார். அப்போது நாராயணபேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் முகமது ஆரிப், சென்னகேசவன், கிளீனர்கள் சிவா, நவீன் ஆகிய நான்கு பேரும் திட்டமிட்டு டூவீலரை பஞ்சர் செய்து பின்னர் உதவி செய்வதுபோல் நடித்து, அவரை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர், அலறி கூச்சலிட்டார்.

ஆனாலும் இதை கண்டுகொள்ளாத 4 பேரும் ஆடைகள் களைந்த நிலையில் அவரை  லாரி கேபினில் வீசி அங்கேயும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இரவு 9. 20 மணி முதல் 10. 30 மணி வரை இந்த வெறியாட்டம் நடந்துள்ளது. சுயநினைவு இழந்த பெண் டாக்டரை சுமார் 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சட்டான்பள்ளி என்ற இடத்திற்கு லாரியில் கடத்திச்சென்று அங்குள்ள பாலத்தின் அடியில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் 4 பேரையும் நடுரோட்டில் வைத்து என்கவுன்டர் செய்யவேண்டும் அல்லது தூக்கிலிட வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு மகளிர் அமைப்பினர், மாணவர் சங்கத்தினர் போராட்டங்களை நடத்தினர்.

குற்றவாளிகளை பெற்ற தாய்மார்களும் தவறு நடந்திருந்தால் அவர்களை கொன்றுவிடலாம் என்று தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முகம்மது ஆரிப் உள்பட 4 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களிடம் விசாரிப்பதற்காக தெலங்கானா மாநில அரசு, விரைவு நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது. அதன்படி குற்றவாளிகளிடம் விசாரணை தொடங்கியது.

நேற்று முன்தினம் குற்றவாளிகள் 4 பேரையும் 10 நாட்கள் கஸ்டடியில் எடுக்க அனுமதி வழங்கவேண்டும் என போலீசார் மனு அளித்தனர். ஆனால் 7 நாட்களுக்கு கஸ்டடி வழங்கி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

வழக்கு விசாரணையை விரைவில் முடித்து விரைவு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர தெலங்கானா மாநில காவல்துறை ஆணையாளர் சஜ்ஜனார் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார். இதற்காக துணை ஆணையாளர் பிரகாஷ் தலைமையில் 4 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தடயவியல் ஆய்வக நிபுணர்கள் இணைந்து குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த விசாரணையின் ஆதாரமாக நான்கு பேரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் தொழில்நுட்ப ரீதியாக போலீசார் பல்வேறு தகவல்களை சேகரித்தனர். சட்டான்பள்ளி மேம்பாலம் கீழ் பெண் டாக்டர் உடலை எரித்த இடத்தின் அருகில் தங்க கொலுசு மற்றும் ஜீன்ஸ் பேண்ட் கிழிந்த நிலையில் போலீசார் கண்டுபிடித்து சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர்.

மேலும் கொலை நடந்த இடத்தின் அருகில் 500 மீட்டர் தொலைவில் பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதிகளில் போலீசார் 4 குற்றவாளிகளையும் அழைத்து வந்து விசாரிக்க முயன்றனர்.

ஆனால் கடும் கொந்தளிப்பில் இருந்த பல்வேறு அமைப்பினர், 4 குற்றவாளிகளையும் கடுமையாக தாக்குவதற்கு தயாராக இருந்த காரணத்தால் போலீசார் சற்று தயக்கம் காட்டி வந்தனர்.

குறிப்பாக 4 குற்றவாளிகளும் வைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தை தினசரி ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டும், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடத்தியும் தங்கள் கோபத்தை காட்டினர்.

குறிப்பாக குற்றம் செய்தவர்களுக்கு போலீசார் மட்டன் பிரியாணி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து போலீசாருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

ஒவ்வொரு முறையும் 4 குற்றவாளிகளையும் பகலில் விசாரணைக்கு அழைத்து செல்ல முயலும்போது, பல்வேறு அமைப்பினர் இடையூறு செய்து, உடனே தூக்கில் போடும்படி கோஷமிட்டு வந்தனர். இதனால் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர்.

அதன்படி காவல்துறை ஆணையாளர் சஜ்ஜனார் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 2. 30 மணிக்கு 4 குற்றவாளிகளையும், சம்பவம் நடந்த சட்டான்பள்ளி மேம்பாலம் அருகே பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்றனர்.

விவரங்களை வீடியோவில் பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைக்கவும் 2 தனிப்படையினரும் உடன் சென்றிருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு குற்றவாளிகள் 4 பேரும் போலீசார் மீது திடீரென சரமாரி கற்களை வீசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. போலீசார் சுதாரிப்பதற்குள் 4 பேரும் அங்கிருந்து தப்ப ஓட முயன்றனராம்.

இதனால் தற்காப்புக்காக காவல்துறை ஆணையாளர் சஜ்ஜனார் தலைமையிலான போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே சிவா, நவீன் உயிரிழந்தனர்.

குண்டு காயமடைந்த சென்னகேசவன், முகமது ஆரிப் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு செல்ல வாகனத்தில் ஏற்றியபோது அவர்களும் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் டாக்டர் எரித்துக்கொலை சம்பவத்தில் பெற்றோர்,

பொதுமக்கள் மற்றும் மகளிர் சங்கத்தினர் என நாடு முழுவதும் குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவந்த நிலையில் போலீசார் அதனை சிறப்பாக செய்திருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் துணிவான முயற்சியை மேற்கொண்ட போலீசாருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

பெண் டாக்டரை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கொடூரன்கள், அவரை லாரி கேபினில் வீசியுள்ளனர். அங்கேயும் வெறியாட்டம் போட்டுள்ளனர்.

இரவு 9. 20 மணி முதல் 10. 30 மணி வரை  இந்த வெறியாட்டம் நடந்துள்ளது.

சுயநினைவு இழந்த பெண் டாக்டரை சுமார் 24  கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சட்டான்பள்ளி என்ற இடத்திற்கு லாரியில்  கடத்திச்சென்று அங்குள்ள பாலத்தின் அடியில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை  செய்தனர்.

.

மூலக்கதை