அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கிசூடு இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்...2 வீரர்கள் பலி, 3 பேருக்கு சிகிச்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கிசூடு இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்...2 வீரர்கள் பலி, 3 பேருக்கு சிகிச்சை

ஹவாய்: அமெரிக்கா ஹவாய் தீவில் உள்ள பியர்ல் ஹார்பரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இந்திய விமானப்படை தளபதி  பதாரியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அமெரிக்க வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

3 பேர் தீவிர சிகிச்சை பெற்று  வருகின்றனர். அமெரிக்காவின் ஹவாய் தீவில் பியர்ல் ஹார்பரில் கப்பல் கட்டும் தளம் மற்றும் கடற்படை தளம் அமைந்துள்ளது.   இந்த தளத்தில் பசிபிக் விமானப்படை கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் பங்குபெறுவதற்காக  இந்தியா விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா தலைமையில் அதிகாரிகள் இந்தியாவில் இருந்து சென்றிருந்தனர்.

இந்தநிலையில் இந்திய நேரப்படி அதிகாலை 2. 30 மணியளவில் அமெரிக்க கடற்படை மற்றும் இந்திய விமானப்படை  கூட்டுப் பயிற்சி நடைபெற்று கொண்டிருந்தது.

அதில் இந்திய விமானப்படை தளபதி, அமெரிக்கா அதிகாரிகள் பலர்  பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் கப்பல் கட்டும் தளத்திற்குள் திடீரென கடற்படை வீரர்கள் உடையில் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.   அவர் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினார்.

இதில் பயிற்சியில்  ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் விமானபடையினர் மீது குண்டு சரமாரியாக பாய்ந்தது. அதில், அமெரிக்காவை சேர்ந்த  பாதுகாப்புத்துறை வீரர்கள் 2 பேர் சம்பவ இடத்திலையே பலியாகினர், மேலும் 3 பேர் மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர், தாக்குதலுக்கு பின்பு தனது தலையில் தானே  சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.   இந்த தாக்குதலின் போது இந்திய விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா சம்பவ இடத்தில் இருந்தார்.

ஆனால் அவர்  மீது துப்பாக்கி தாக்குதல் நடக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேலும் உடனிருந்த இந்திய  அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் துப்பாக்கி சூட்டில்  ஈடுபட்டவர் அமெரிக்க  பாதுகாப்புத்துறையை சேர்ந்த அதிகாரி என்று தெரிவந்துள்ளது.

மேலும் இறந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று   வருபவர்களின் விவரங்களை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. இந்திய விமானப்படை தளபதி பங்குபெற்ற நிகழ்ச்சியில்  இந்த திடீர் துப்பாக்கிசூடு சம்பவம் நடந்தது, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் ஹவாய் பியர்ல் ஹார்பரில் கடந்த 1941ம் ஆண்டு நடந்த தாக்குதலில் 2403 வீரர்கள் உயிரிழந்தது  குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை