மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் பகுதியில் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்ட கன்டெய்னர், ஜேசிபிக்கு அபராதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் பகுதியில் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்ட கன்டெய்னர், ஜேசிபிக்கு அபராதம்

திருவொற்றியூர்: மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் பகுதியில் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட கன்டெய்னர் லாரி,  பொக்லைன் இயந்திரத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை மணலி புதுநகர் அருகே பொன்னேரி நெடுஞ்சாலையில், மாநகர பஸ், கன்டெய்னர் லாரி, கார் மற்றும் பைக்  என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பொன்னேரி நெடுஞ்சாலை ஆண்டார்குப்பம் அருகே  சர்வீஸ் சாலையில், கன்டெய்னர், டேங்கர் லாரி மற்றும் தனியார் பஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டது.

இதனால் மற்ற  வாகனங்கள் செல்ல முடியாமல் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தவித்தனர். இதற்கு தீர்வுகாண  வேண்டும் என்று மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், மணலியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ் தலைமையில், உதவி ஆய்வாளர்கள்  எழிலன், சாந்தி ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று காலை மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் பகுதிகளில் ஆய்வு  செய்தனர்.

பின்னர் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி, டேங்கர் லாரி மற்றும் பொக்லைன்  இயந்திரம் உள்பட 180 வாகனங்களுக்கு 700 முதல் 3,700 ரூபாய் வரை அபராதம் விதித்தனர். பின்னர் அந்த லாரிகளை  அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து, சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்த கூடாது என்ற நோ பார்க்கிங் அறிவிப்பு  பலகை வைத்தனர்.

.

மூலக்கதை