‘பாதிரியார்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்’ கன்னியாஸ்திரி எழுதிய புத்தகத்துக்கு தடைகோரிய மனு தள்ளுபடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘பாதிரியார்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்’ கன்னியாஸ்திரி எழுதிய புத்தகத்துக்கு தடைகோரிய மனு தள்ளுபடி

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி எழுதிய புத்தகத்துக்கு தடை கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி  செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குரவிலங்காட்டில் உள்ள கன்னியாஸ்திரி மடத்தை சேர்ந்த  கன்னியாஸ்திரியை ஜலந்தர் பிஷப் பிராங்கோ பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

பிஷப் பிராங்கோ மீது கன்னியாஸ்திரி புகார் கூறி பல நாட்கள் ஆன பின்னரும் முதலில் அவர் மீது  ேபாலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இதையடுத்து கேரளாவில் பல்வேறு பகுதிகளை ேசர்ந்த  கன்னியாஸ்திரிகள் பிஷப் பிராங்கோவை கைது செய்ய கோரி கொச்சியில் தொடர் போராட்டம் நடத்தினர்.



இந்த போராட்டத்தில் பங்கேற்ற லூசி என்ற கன்னியாஸ்திரிக்கு எதிராக அவர் சார்ந்த சபை கடும் நடவடிக்கை எடுத்தது.   சமீபத்தில் அவரை மடத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. மேலும் கன்னியாஸ்திரி பொறுப்பில் இருந்தும் அவரை  நீக்கியது.

இதையடுத்து இந்த நடவடிக்கையை ரத்து செய்ய கோரி கன்னியாஸ்திரி லூசி, வாடிகனில் உள்ள ேபாப்  ஆண்டவருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இந்த நிலையில் கன்னியாஸ்திரி லூசி  ‘கர்த்தாவின்றே நாமத்தில்’ என்ற பெயரில் தனது சுய சரிதையை எழுதியுள்ளார். இந்த புத்தகம் அடுத்த வாரம் வெளியாக  உள்ளது.

இந்த புத்தகத்தில் பாதிரியார்களுக்கு எதிராக பல திடுக்கிடும் தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த புத்தக விற்பனையை தடை செய்ய கோரி கொச்சி களமசேரி எஸ்எம்ஏ கான்வென்டை சேர்ந்த  லிசியா ஜோஸ் என்ற கன்னியாஸ்திரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் அவர்  கூறியிருப்பதாவது:  கன்னியாஸ்திரி லூசி எழுதியுள்ள ‘கர்த்தாவின்றே நாமத்தில்’ என்ற புத்தகத்தில் பாதிரியார் குறித்து அவதூறாக  எழுதியுள்ளார். இது பலரின் மனதை புண்படுத்தி உள்ளது.

எனவே இந்த புத்தக விற்பனையை தடை செய்ய வேண்டும்  என குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரர் புத்தகத்துக்கு எதிராக போலீசில் புகார் செய்யவோ,  கீழ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவோ இல்லை.

எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறினார்.

உயிருக்கு  அச்சுறுத்தல்

கன்னியாஸ்திரி லூசி எர்ணாகுளம் அருகே காரக்காமலையில் உள்ள மடத்தில் தங்கி உள்ளார். நேற்று நள்ளிரவு  அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தீ பந்தங்களுடன் அந்த மடத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

கன்னியாஸ்திரி  லூசிக்கு எதிராக மடத்தின் முன் நின்று கோஷமிட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து லூசி  கூறியது. கடந்த சில தினங்களாகவே வாட்ஸ் அப், யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் எனக்கு மிரட்டல்கள்  வருகிறது.

இது குறித்து போலீசுக்கு புகார் செய்வேன். எந்த காரணம் கொண்டும் புத்தகத்தை வெளியிடுவதில் இருந்து  பின் வாங்குவதில்லை என கூறினார்.


.

மூலக்கதை