தெற்காசிய விளையாட்டு போட்டி: அசத்தி வரும் தடகள வீரர்கள்...இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தெற்காசிய விளையாட்டு போட்டி: அசத்தி வரும் தடகள வீரர்கள்...இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது

காட்மண்ட்: நேபாளத்தில் நடந்து வரும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய தடகள வீரர்கள், தொடர்ந்து  பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர். இதுவரை மொத்தம் 32 தங்கம், 26 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என 71  பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.

மேலும் பல போட்டிகளில் அரையிறுதி வாய்ப்புகளை இந்திய வீரர்கள்,  வீராங்கனைகள் உறுதி செய்துள்ள நிலையில், இந்தியாவின் கணக்கில் இன்னும் பதக்கங்கள் சேரும் என்று வீரர்கள்  மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நேபாள் தலைநகர் காட்மண்டுவில் தெற்காசிய விளையாட்டு போட்டிகள்-2019 கடந்த 1ம் தேதி துவங்கின.

வரும் 10ம்  தேதி வரை இப்போட்டிகள் நடைபெறும்.

இதில் இந்திய தடகள வீரர்கள், வீராங்கனைகள் குறிப்பிடத்தக்க வகையில் முத்திரை பதித்து வருகின்றனர். கடந்த  செவ்வாய் கிழமை தடகள போட்டிகள் துவங்கின.

முதல் நாளிலேயே இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 4  தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை அள்ளினர். மகளிர் 200 மீ ஓட்டத்தில் அர்ச்சனா 23. 67 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.

அதே போட்டியில் இந்திய  வீராங்கனை சந்திரா வெண்கலம் வென்றார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் சுரேஷ்குமார் தங்கம் வென்றார்.   மகளிர் வட்டு எறிதல் போட்டியில் நவ்ஜீத் கவுர் தில்லான் தங்கம் வென்றார்.

அதே பிரிவில் சுர்வி பிஸ்வாஸ் வெள்ளி  வென்றார்.

தொடர்ந்து தடகளத்தில் இந்திய வீரர்கள் பிரகாசிக்க, நேற்று மாலை நிலவரப்படி இந்தியா 32 தங்கம், 26 வெள்ளி  மற்றும் 13 வெண்கலம் என 71 பதக்கங்களை குவித்துள்ளது.
பாட்மின்டனில் இந்தியாவின் சிரில் வர்மா, ஆர்யமான் டண்டன் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் நுழைந்து  பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த், இறுதிப்போட்டிக்கு தகுதி  பெற்றுள்ளார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கார்க்-அனுஷ்கோ ஜோடியும், மேக்னா-நெல்குர்தி ஜோடியும்  அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கலப்பு டரட்டையரில் துருவ் கபிலா-ஜக்கம்புடி ஜோடி அரையிறுதிக்கு  முன்னேறியுள்ளது.

டேபிள் டென்னிசில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்-அந்தோணி அமல்ராஜ் ஜோடி, தங்கம்  வென்றது.

அவர்களுடன் மோதிய இந்திய வீரர்கள் சனில் ஷெட்டி-குரோவர் ஆகியோர் வெள்ளி வென்றனர். மகளிர்  இரட்டையர் பிரிவிலும் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்களைகளே மோதினர்.

இதில் மதுரிகா-ஜா தங்கம்  வென்றனர். சுகிர்தா-அகிகாவுக்கு வெள்ளி கிடைத்தது.

கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணிக்கே தங்கம்  கிடைத்தது.

.

மூலக்கதை