10 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும்: ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்...மாவோயிஸ்ட் கடிதத்தால் உ.பி-யில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
10 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும்: ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்...மாவோயிஸ்ட் கடிதத்தால் உ.பியில் பரபரப்பு

லக்னோ: உத்தரபிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்ய நாத்தும், ஆளுநராக பாஜ கட்சியின் மூத்த தலைவரும், குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான  ஆனந்திபென் படேல் பணியாற்றி வருகிறார். அவரது பெயருக்கு, நேற்று மாவோயிஸ்ட் தரப்பில் கடிதம் ஒன்று ஆளுநர் மாளிகைக்கு வந்தது.   இதுதொடர்பாக, மாநில தலைமை செயலகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கூடுதல் தலைமைச் செயலாளர் (ஆளுநர்) ஹேமந்த் ராவ்,  இந்த கடிதம் குறித்து மாநில உள்துறை துறைக்கு அனுப்பியுள்ளார்.
ஜார்க்கண்டில் இருந்து வந்துள்ள அந்த கடிதத்தை, மாவோயிஸ்ட் அமைப்பான திரிதியா சம்மலன் பிரஸ்துட்டி கமிட்டி (டிஎஸ்பிசி) எழுதியுள்ளது  தெரியவந்தது.



அதில், ‘ஆளுநர் பத்து நாட்களுக்குள் ராஜ் பவன் வீட்டை விட்டு  வெளியேறாவிட்டால் டைனமைட்டுடன் வெடிவைத்து ராஜ் பவன்  தகர்க்கப்படும்’ என்று அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.   இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் (வீட்டு) அவனிஷ் குமார் அவஸ்தி கூறுகையில், ‘‘ஆளுநரின்  வீட்டிற்கு வந்த அச்சுறுத்தல் கடிதத்தை,  உள்துறை மிகவும் தீவிரமாக  விசாரித்து வருகிறது. முதற்கட்ட விசாரணை செய்ய மாநில டிஜிபி, புலனாய்வு  அமைப்புகளுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனுடன்,  ஆளுநரின் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதன்கிழமை மாலைக்குள்  (இன்று) விசாரணை  அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு உள்துறை கேட்டுள்ளது.

இதுதொடர்பாக, உள்துறையின் மாநில காவல் புலனாய்வு இயக்குனர் ஜெனரல், கூடுதல்  பாதுகாப்பு டிஜிபி-க்கு கடிதம் எழுதியுள்ளார். பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன’’  என்றார்.

இதற்கிடையில், மூத்த அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதால், வெடிகுண்டு அச்சுறுத்தல் கடிதம் குறித்து தங்களுக்கு தெரியாது  என்று லக்னோ காவல்துறை தெரிவித்தது.

.

மூலக்கதை