ஐஎஸ் முகாமில் சேர்ந்து பயற்சி பெற்ற கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஆப்கன் ராணுவத்தில் சரணடைந்தார்: இந்தியா கொண்டுவர என்ஐஏ நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐஎஸ் முகாமில் சேர்ந்து பயற்சி பெற்ற கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஆப்கன் ராணுவத்தில் சரணடைந்தார்: இந்தியா கொண்டுவர என்ஐஏ நடவடிக்கை

திருவனந்தபுரம்: ஐஎஸ் முகாமில் சேர்ந்து பயிற்சி பெற்ற கேரளாவை சேர்ந்த இளம்பெண், ஆப்கன் ராணுவத்தில் சரணடைந்தார். அவரை இந்தியா கொண்டுவர  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரளாவில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக  தகவல் வந்தது. காசர்கோடு திருக்கரிப்பூரை சேர்ந்த ராஷீத், இவர்களை அழைத்து சென்றதாக தகவல் கிடைத்தது.

இதுகுறித்து உள்ளூர் போலீசார்  விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.



இதுபற்றி என்ஐஏ விசாரணையில், 21 பேரும் துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் வழியாக ஆப்கானிஸ்தான் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து  அங்குள்ள  ஐஎஸ் தீவிரவாத முகாமில் சேர்ந்து பயிற்சி பெறுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ராஷீத்துடன் எர்ணா குளத்தை சேர்ந்த சோனியா செபஸ்டியான் என்ற இளம் பெண்ணும் சென்றார். இவர் பிஇ மற்றும் எம்பிஏ படித்துள்ளார்.

படிக்கும்போது ராஷீத்தை  காதலித்து அவரை திருமணம் செய்துகொண்டு ஆயிஷா என்று பெயரை மாற்றி முஸ்லிமாக மாறினார். சமீபத்தில் ஐஎஸ் தீவிரவாத முகாம்கள் மீது  அமெரிக்க படை தாக்குதல் நடத்தியபோது ராஷீத் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் 600க்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் ஆதரவாளர்கள்  சரணடைந்தனர்.

இவர்களில் கேரளாவை சேர்ந்த சிலரும் இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை  நடத்தியது.

இதில் எர்ணாகுளத்தை சேர்ந்த சோனியா செபஸ்டியான் என்ற ஆயிஷாவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் ஒரு குழந்தை  இருக்கும் புகைப்படம் என்ஐஏக்கு கிடைத்துள்ளது.

அந்த குழந்தை தற்போது உயிருடன் இருக்கிறதா? என்பது தெரியவில்லை.

இதனிடையே  ஆயிஷாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை