கார்கள் பதிவு செய்து ரூ.25 லட்சம் வரி ஏய்ப்பு நடிகர் சுரேஷ்கோபி எம்பி மீது போலீசார் குற்றப்பத்திரிகை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கார்கள் பதிவு செய்து ரூ.25 லட்சம் வரி ஏய்ப்பு நடிகர் சுரேஷ்கோபி எம்பி மீது போலீசார் குற்றப்பத்திரிகை

திருவனந்தபுரம்: புதுச்சேரியில் கார்கள் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்த வழக்கில் நடிகரும் பாஜ எம்பியுமான சுரேஷ்கோபி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட  உள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக புதுச்சேரி மாநிலத்தில் தங்கள் வாகனங்களை பதிவு  செய்கின்றனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு வாகன பதிவு கட்டணம் மிகவும் குறைவாகும். அங்கு வாகனம் பதிவு செய்ய உள்ளூரில்  தங்கி இருப்பதாக ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்காக பலர் போலி முகவரிகளை தாக்கல் செய்கின்றனர்.

இதன்படி கேரளாவை சேர்ந்த நடிகை அமலாபால், நடிகர் பகத்பாசில் மற்றும் நடிகரும், பாஜ ராஜ்யசபா எம்பியுமான சுரேஷ்கோபி உள்ளிட்டோர்  போலியான ஆவணங்கள் தாக்கல் செய்து வாகனம் பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு  செய்தனர்.

இதையடுத்து நடிகை அமலாபால், நடிகர் பகத்பாசில் ஆகியோர் கூடுதல் வரி செலுத்தி இந்த வழக்கில் இருந்து தங்களை  விடுவித்துக்கொண்டனர்.

ஆனால் நடிகர் சுரேஷ்கோபி இதுவரை கேரள அரசுக்கு எந்த வரியும் செலுத்தவில்லை.

அவர் 2010 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் விலை உயர்ந்த  2 கார்களை புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் அவர் ரூ. 25 லட்சம் வரி எய்ப்பு செய்துள்ளார்.

இதையடுத்து அவர் மீது குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்ய குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி டோமின்பஞ்சங்கரி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி சுரேஷ்கோபி மீது உடனடியாக நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

.

மூலக்கதை