ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாட்கள் சிறையில் இருந்த ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன்...சுப்ரீம் கோர்ட் உத்தரவு; இன்று மாலை விடுதலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாட்கள் சிறையில் இருந்த ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன்...சுப்ரீம் கோர்ட் உத்தரவு; இன்று மாலை விடுதலை

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ப. சிதம்பரத்திற்கு, 106 நாட்களுக்கு பின் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதனால், அவர் இன்று மாலை டெல்லி திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.   முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரம் பதவி வகித்த போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் ரூ. 305 கோடி அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரில் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி, டெல்லியில் ப. சிதம்பரத்தை அவரது வீட்டில் வைத்து சிபிஐ கைது செய்தது.

இவ்வழக்கில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோதிலும், இதே வழக்கு தொடர்பான பணப் பரிமாற்ற வழக்கில், டெல்லி திகார் சிறையில் இருந்த ப. சிதம்பரத்தை அக். 16ம் தேதி அமலாக்கத்துறையும் கைது செய்தது.

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு ப. சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை,  டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. முன்னதாக, ப. சிதம்பரத்தின் காவலை டிச.

11ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று வழங்குவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, ஏ. எஸ். போபன்னா, ஹிரிஷிகேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு, 106 நாட்களாக டெல்லி திகார் சிறையில் இருந்த ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.   முன்னதாக நீதிபதிகள் தரப்பில், ‘பொருளாதார குற்றங்கள் இருக்கும்பட்சத்தில், அதனை நீதிமன்றம் அதிக கவனம் செலுத்தி கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஜாமீன் மனு தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது குறித்து தீர ஆலோசிக்கப்பட்டது.

ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழும்ெபாழுது அது குறித்து ஆராய வேண்டியுள்ளது. ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது.



அவர் பிணைய தொகையாக ரூ. 2 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்.

விசாரணைக்கு அழைக்கும்போதெல்லாம் அமலாக்கத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பாஸ்போர்ட் சிபிஐ-யிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளீர்கள்; இதற்கான தகவலை அமலாக்கத்துறையிடமும் தெரிவிக்க வேண்டும்.

வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கக் கூடாது. அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது’ என்று நிபந்தனை அடிப்டையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.


சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த 2 வழக்கிலும் உச்சநீதிமன்றம் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளால், அவர் சிறையில் இருந்து வெளியே வருவதில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளன.

அதனால், 106 நாட்கள் சிறைவாசம் இருந்த ப. சிதம்பரம், நீதிமன்ற உத்தரவு மற்றும் சிறைத்துறை நடைமுறைகள் முடிந்து இன்று மாலை திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

.

மூலக்கதை