தெற்காசிய விளையாட்டு போட்டி ‘ரன்’ ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட்...நேபாள வீராங்கனை உலக சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தெற்காசிய விளையாட்டு போட்டி ‘ரன்’ ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட்...நேபாள வீராங்கனை உலக சாதனை

காட்மாண்டு: நேபாளத்தின் போகாராவில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் டி20 கிரிகெட்டில் நேபாள - மாலத்தீவு மகளிர்  அணிகள் மோதின. இரண்டு அணிகளுமே கத்துக் குட்டி அணி என்பதால், இந்த ஆட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

இருந்தும், முதலில்  ஆடிய மாலத்தீவுகள் பெண்கள் அணி 11 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய நேபாள  வீராங்கனை அஞ்சலி சந்த், ரன் ஏதும் விட்டு கொடுக்காமல் 2. 1 ஓவர்கள் பந்துவீசி 6 விக்கெட்களை அள்ளினார்.



இதன்மூலம் மகளிர் டி20 போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சாக உலக சாதனை படைத்துள்ளார். இதற்குமுன் மாலத்தீவுகள் மகளிர் அணியின்  வீராங்கனை மாஸ் எலிசா 3 ரன்கள் விட்டு கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள அணி  வெற்றி பெற்றது. வெற்றி இலக்கான 17 ரன்களை வெறும் 5 பந்துகளிலேயே அடித்தனர்.

சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய வீரர் தீபக் சாஹர் சிறப்பாக பந்துவீசி 7 ரன்கள் விட்டுக் கொடுத்து 6  விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இது ஆடவர் டி20 போட்டிகளில் செய்யப்பட்ட சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது.

இதற்கு முன்பு இலங்கை வீரர்  அஜந்தா மெண்டீஸ் 8 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்த சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு 14 பதக்கம்

காட்மாண்டுவில் நடந்த ஆண்கள் தனிநபர் டிரையத்லான் போட்டியில், ஆதர்ஷா எம். என். சினிமோல் இந்தியா சார்பில் போட்டியிட்டு முதல்  தங்கப்பதக்கம் பெற்றார். பிஷ்வர்ஜித் கோம் வெள்ளி வென்றார்.

பெண்கள் தனிநபர் போட்டியில் சரோஜினி தேவி மற்றும் மோகன் பிரக்னியா ஒரு  வெள்ளி மற்றும் வெண்கலத்தை சேர்த்தனர். டேக்வாண்டோவில், இந்தியா இரண்டு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை  வென்றது.

முதல் நாள் முடிவில், நேபாளம் 15 தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஆறு வெண்கலங்களை வென்றது. இந்தியா இரண்டாவது இடத்திலும்,  இலங்கை மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை மூன்று தங்கம், ஏழு வெள்ளி மற்றும் 14 வெண்கலங்களை வென்றுள்ளது.

.

மூலக்கதை