அறுவை சிகிச்சை நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.225 நிதியுதவி: ஆந்திர முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அறுவை சிகிச்சை நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.225 நிதியுதவி: ஆந்திர முதல்வர் தொடங்கி வைத்தார்

திருமலை: ஆந்திராவில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ. 225 நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன்  தொடங்கி வைத்தார். ஆந்திர மாநிலம், குண்டூர் அரசு மருத்துவமனையில் முதல்வர் ஜெகன்மோகன், ஒய்எஸ்ஆர் ஆரோக்கிய அஸ்ரா திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து  பேசியதாவது:
மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அறுவை சிகிச்சை செய்த நோயாளி வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுவார்கள்.   ஆனால் வீடு திரும்பிய நோயாளி தனது குடும்பத்தில் உள்ளவர்களின் பசியைப் போக்குவதற்காக வேலைக்கு செல்லக் கூடிய நிலை ஏற்படும்.



 இதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டும் ஓய்வு எடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. அதனை போக்குவதற்காக மருத்துவர்கள் வழங்கும்  பரிந்துரையின்படி எத்தனை நாட்கள் ஆனாலும் சரி, அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்கும் நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு ரூ. 225 முதல்  மாதத்திற்கு ரூ. 5 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது.

ஒய்எஸ்ஆர் ஆரோக்கிய  திட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அறுவை  சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள் இதில் பயன்பெறுவார்கள்.

அறுவை சிகிச்சை முடிந்து 48 மணி நேரத்திற்கு பிறகு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் விதமாக இத்திட்டம் தற்போது  கொண்டுவரப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஜனவரி 1ம் தேதி முதல் புதிய ஆரோக்கிய  கார்டுகள் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு கீழ் உள்ள அனைவருக்கும்  வழங்கப்பட உள்ளது. இந்த கார்டில் க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்டு நோயாளிகளின் மருத்துவ குறிப்புகளும் இடம் பெறும் விதமாக செய்யப்படுகிறது.   1200 நோய்களுக்கு ஆரோக்கிய  திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் விதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

.

மூலக்கதை