பசிக்கு மண் தின்று உயிர் வாழ்ந்த குழந்தைகள்: கேரளாவில் வறுமையால் அவலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பசிக்கு மண் தின்று உயிர் வாழ்ந்த குழந்தைகள்: கேரளாவில் வறுமையால் அவலம்

திருவனந்தபுரம்: கேரளாவில் வருமானம் இல்லாமல் தவித்த ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பசியால் மண் தின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் தலைமை செயலகத்துக்கு அருகில் ஒப்பிடாமூடு பாலம் உள்ளது.

இங்கு ரயில்வே புறம்போக்கு காலனி உள்ளது. இந்த  காலனியில் குஞ்ஞுமோன் என்பவர் ஒரு குடிசையில் தனது மனைவி ஸ்ரீதேவியுடன் வசித்து வருகிறார்.

இவர்களுக்கு 3 மாத பச்சிளங்குழந்தை முதல் 7  வயது வரையுள்ள 6 குழந்தைகள் உள்ளனர். மரம் ஏறும் தொழிலாளியான இவருக்கு குடிபழக்கம் உண்டு.   சரியாக வேலைக்கு செல்ல மாட்டார்.

குடும்ப செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. இதனால் குடும்பத்தினர் வறுமையில் வாடினர்.

குழந்தைகளை  வளர்க்க முடியாமல் தேவி தவித்தார்.

 கடந்த பல நாட்களாக வீட்டில் சமையல் செய்யவே இல்லை. பசியால் வாடிய குழந்தைகள் வீட்டின் அருகில்  உள்ள மண்ணை சாப்பிட்டு வந்துள்ளனர்.

குழந்தைகள் மண் சாப்பிடுவதை அருகில் உள்ளவர்கள் கவனித்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல்  தெரிவித்தனர். இதையடுத்து மாநில பொது செயலாளர் தீபா தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்றனர்.

அங்கிருந்த நிலைமையை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி  அடைந்தனர். குடிசை கட்டுவதற்கு வசதி இல்லாததால் பிளக்ஸ் போர்டால் குடிசை அமைத்திருந்தனர்.

உணவு இல்லாமல் குழந்தைகள் தளர்ந்து  காணப்பட்டனர். 3 மாத குழந்தை பசியால் துடித்து கொண்டு இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர்களுக்கு உணவு வாங்கி  கொடுத்தனர்.

அப்போது தேவி 4 குழந்தைகளை அரசு காப்பகத்தில் வைத்து கவனிக்க முடியுமா? என அதிகாரிகளிடம் ேகட்டார். இதையடுத்து 3 மாத குழந்தை  மற்றும் ஒரு குழந்தை தவிர மற்ற 4 பேரையும் அரசு காப்பகத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த தகவல் அறிந்து திருவனந்தபுரம் மாநகர மேயர் குமார்,  எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுதீரன் ஆகியோர் அங்கு சென்றனர்.   அந்த குடும்பத்தை மாநகராட்சிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் தெரிவித்தார்.   தேவிக்கு மாநகராட்சியில் தற்காலிக வேலை வழங்கப்படும் எனவும் கூறினார். அதோடு தேவியும், 2 குழந்தைகளும் மகளிர் காப்பகத்தில்  சேர்க்கப்பட்டனர்.

குழந்தைகள் பசியாற மண் தின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை