இன்னிங்ஸ், 48 ரன்னில் பாக். படுதோல்வி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

தினகரன்  தினகரன்
இன்னிங்ஸ், 48 ரன்னில் பாக். படுதோல்வி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

அடிலெய்டு: பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில் (பகல்/இரவு), இன்னிங்ஸ் மற்றும் 48 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 302 ரன்னுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது. 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய அந்த அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன் எடுத்திருந்தது. ஷான் மசூத் 14, ஆசாத் ஷபிக் 8 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் அரை சதம் அடித்தனர். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 103 ரன் சேர்த்தது. ஷான் மசூத் 68 ரன் (127 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), ஆசாத் ஷபிக் 57 ரன் (112 பந்து, 5 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர்.இப்திகார் அகமது 27, முகமது ரிஸ்வான் 45, யாசிர் ஷா 13 ரன் எடுக்க, ஷாகீன் அப்ரிடி, முகமது அப்பாஸ் தலா 1 ரன்னில் வெளியேறினர். பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 239 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (82 ஓவர்). மூசா 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் நாதன் லயன் 25 ஓவரில் 7 மெய்டன் உட்பட 69 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஹேசல்வுட் 3, ஸ்டார்க் 1 விக்கெட் கைப்பற்றினர்.ஆஸி. அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான 60 புள்ளிகளை முழுமையாகப் பெற்ற ஆஸி. அணி 176 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்தியா 360 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

மூலக்கதை