ஐசிசி யு-19 உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கு பிரியம் கார்க் கேப்டன்

தினகரன்  தினகரன்
ஐசிசி யு19 உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கு பிரியம் கார்க் கேப்டன்

மும்பை: ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் பிரியம் கார்க் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இளைஞர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் (யு-19), தென் ஆப்ரிக்காவில் அடுத்த மாதம் 17ம் தேதி தொடங்கி பிப். 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதவுள்ளன.ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஜப்பான், நியூசிலாந்து, இலங்கை அணிகளின் சவாலை எதிர்கொள்கிறது. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை அணியுடன் ஜன. 19ம் தேதி மோதுகிறது. இந்த நிலையில், இத்தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பிரியம் கார்க் தலைமையிலான அணியில் மொத்தம் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.முதல் தர கிரிக்கெட்டில் இரட்டை சதம் மற்றும் லிஸ்ட் ஏ போட்டியில் சதம் விளாசியுள்ள பிரியம் கார்க், தியோதர் டிராபியில் இந்தியா சி அணிக்காகவும் விளையாடி உள்ளார். இந்தியா பி அணிக்கு எதிராக பைனலில் அவர் 74 ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது. மிக இளம் வயதில் லிஸ்ட் ஏ போட்டியில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த மும்பையை சேர்ந்த இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். யு-19 உலக கோப்பை தொடருக்கு முன்பாக தென் ஆப்ரிக்க யு-19 அணியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரிலும், அதைத் தொடர்ந்து 4 நாடுகள் யு-19 தொடரிலும் விளையாட உள்ள இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.யு-19 உலக கோப்பை அணி: பிரியம் கார்க் (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, திவ்யான்ஷ் சக்சேனா, துருவ் சந்த் ஜுரெல் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷாஸ்வத் ராவத், திவ்யான்ஷ் ஜோஷி, ஷுபாங் ஹெக்டே, ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி, அதர்வா அங்கொலேகர், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), சுஷாந்த் மிஸ்ரா, வித்யாதர் பட்டீல்.தென் ஆப்ரிக்க தொடருக்கான அணியில் 16வது வீரராக சிடிஎல் ரக்‌ஷன் இடம் பெற்றுள்ளார்.

மூலக்கதை