இரட்டை சதம் விளாசினார் ஜோ ரூட் முன்னிலை பெற்றது இங்கிலாந்து

தினகரன்  தினகரன்
இரட்டை சதம் விளாசினார் ஜோ ரூட் முன்னிலை பெற்றது இங்கிலாந்து

ஹாமில்டன்: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், கேப்டன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்ததால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது.செடான் பார்க் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 375 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து, 3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்திருந்தது. ரோரி  பர்ன்ஸ் 101  ரன் விளாசி ரன் அவுட்டானார். ஜோ ரூட் 114 ரன், ஓலி போப் 4 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்த இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 193 ரன் சேர்த்து அசத்தியது. இரட்டை சதம் விளாசிய ரூட் 226 ரன் (441 பந்து, 22 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சான்ட்னர் பந்துவீச்சில் நிகோல்ஸ் வசம் பிடிபட்டார். ஓலி போப் 75 ரன் எடுக்க (202 பந்து, 6 பவுண்டரி), அடுத்து வந்த வோக்ஸ் (0), ஆர்ச்சர் (8), பிராடு (0) ஆகியோர் வேக்னர் பந்துவீச்சில் அணிவகுத்தனர். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 476 ரன் குவித்து (162.5 ஓவர்) ஆல் அவுட்டானது. சாம் கரன் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் நீல் வேக்னர் 5, சவுத்தீ 2, ஹென்றி, சான்ட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 101 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்துள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் 37 ரன், ராஸ் டெய்லர் 31 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை